சுதேசி செயலி மூலம் கலக்கும் திருச்சி ஆட்டோ ஓட்டுனர்கள்

சுதேசி செயலி மூலம் கலக்கும் திருச்சி ஆட்டோ ஓட்டுனர்கள்
சுதேசி செயலி மூலம் கலக்கும் திருச்சி ஆட்டோ ஓட்டுனர்கள்

ஏழைகளின் முதல் சொகுசு வாகனம் என்றால் எல்லோர் நினைவுக்கும் வருவது முதிலில் ஆட்டோ தான். ஆட்டோ ஓட்டுநர்களும் நம் நினைவிலிருந்து எப்போதும் நீங்காதவர்கள். நடமாடும் கூகுள் மேப் என்று சொன்னாலும் போதாது அத்தனை தெளிவாய் வழிசொல்லும் ஓட்டுனர்களின் வாழ்வில் முன்னேற்றத்திற்கான வழிகள் இல்லாமல் இருப்பது ஆச்சரியக்குறியோடு இணைந்த கேள்விக்குறி. "பிரசவத்திற்கு இலவசம்" என்ற வசனம் இன்றைக்கும் நினைவூட்டும் ஆட்டோ ஓட்டுநர்களின் மனிதநேய வெளிப்பாடு. ஏழைகளின் நண்பனான ஆட்டோ வணிக நோக்கத்தால் புதிய வளர்ச்சி என்ற பெயரில் பெருநிறுவனங்களின் தொழில் சுரண்டலக்கும் முதலாளித்துவத்திற்கும் ஆளானது.

OLA, Uber போன்ற பெருநிறுவனங்களின்   முதலாளித்துவக்குள்  தன் வாழ்வை அடிமையாய் மாற்ற நினைக்கும் வணிக முதலைகளுக்கு எதிராய்  தங்கள் வாழ்க்கைக்காக சுவாசக்காற்றை சுதந்திரமாய் சுவாசிக்க தொடங்கியுள்ளனர் திருச்சி வாழ் ஆட்டோ ஓட்டுநர்கள். திருச்சி மாநகர் முழுவதும் ஏற்கனவே வலம் வரும் உழைப்பின் சுரண்டலக்கான  முற்றுப்புள்ளி தான் சுதேசி ஆட்டோ சுய வாழ்வுக்கான தொடக்கம்.

இத்திட்டத்தை பற்றிய சிந்தனை அடித்தளமிட்ட ஆட்டோ ஓட்டுனர் கிருஷ்ணகுமார் நம்மோடு பகிர்ந்துக்கொள்கையில்... பெரும் வணிக புலிகளிடம் சிக்கி தவிக்கும் என்னை போன்ற ஓட்டுநர்கள்  வாழ்வில் முன்னேற என்னதான் வழி என்று சிந்தித்தப்போது எங்களுக்கான பாதையை நாங்களே உருவாக்கிக்கொள்ள நினைத்து சுதேசி ஆட்டோ என்ற பெயரில் குறைவான கட்டணத்தில் ஆட்டோக்களை இயக்க எத்தணித்தோம். பொதுமக்களிடம் இருந்து பெருவாரியான வரவேற்பும் நம்பிக்கையும் கிடைத்தப்பட்சத்தில் இதினை தொடர்ந்திட உதவியது.  

மக்களின் நம்பிகை மற்றும் ஆதரவில் சுதேசி ஆட்டோ ஓராண்டை நிறைவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 500 ஆட்டோக்கள் சுதந்திர மீட்டர் ஆட்டோக்கள் கீழ் இயங்குகின்றன. பெரு நிறுவனங்களுக்கு எதிராக செயல்பட்ட போது ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுனர்கள் மீதும் அவர்களுடைய அடக்குமுறை இருக்கத்தான் செய்தது. ஆனால் எடுத்திருக்கும் நோக்கம் எல்லோரின் வாழ்விற்கான விடிவெள்ளியாக இருக்கும் என்பதால் தொடர்ந்து போராடியதன் விளைவு பொது மக்களிடையே விரைவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றைக்கு சுதேசி என்ற செயலி மூலம் இயங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

எங்களை நம்பிய மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் நாங்களும் அவர்களுக்கு உதவிட வேண்டும் வகையில் சுதேசி என்ற செயலியை பயண்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். வணிக நோக்கத்தோடு இந்தியாவை அடிமைப்படுத்த வந்த வெள்ளையர்கள் துரத்தி அடித்தது போன்று இந்தியாவிலேயே இங்குள்ள மக்களை   அடிமைத்தனமாக மாற்ற நினைக்கும்   பெரும் நிறுவனங்களுக்கு எதிராக சுதேசி என்ற பெயரை சூட்டி தொடர்ந்து மக்களுக்கு பயன்படும் வகையில் பயன்படுத்த உள்ளோம் என்றார்.

500க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இதில் இணைந்துள்ளோம். ஆனால் இன்னும் கூட பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஓட்டுநர்கள் தங்கள் சூழ்நிலை கருதி பெருநிறுவனங்களுக்கு அடிமையாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒரு விடுதலையாக  இருப்பதற்கு இந்த சுதேசி செயலி உதவும். முடிந்த வரை விரைவாக மக்களிடையே இது சென்று சேர வேண்டும்.

மேலும் இத்தனை நாட்கள் பொதுமக்களின் ஆதரவு இன்றி இந்த சுதேசி ஆட்டோக்கள் பெரு நிறுவனங்களுக்கு எதிராக செயல்பட்டிருக்க முடியாது. தொடர்ந்து இன்னும் இன்னும் கூடுதலாக ஆதரவு கிடைக்குமாயின் வருங்காலத்தில் தமிழகம் முழுவதும் இந்த சுதந்திரம் மீட்டர் ஆட்டோக்கள் இயங்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW