திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் செயல்பட்டு வரும் நவீன உடற்பயிற்சி கூடத்தின் செயல்பாட்டு நேரத்தை குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு பயிற்சி பெற்று வரும் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்டம் தோறும் மாணவர்கள், வீரர்-வீராங்கனைகளின் திறனை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு அரங்கங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தடகள வீரர்கள், பல்துறை விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய உடற்பயிற்சி கூடங்களும் செயல்பட்டு வருகின்றன.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் செயல்பட்டு வரும் நவீன உடற்பயிற்சி கூடம் கடந்த காலங்களில் காலை 6 மணி முதல் 10.30 மணி வரை செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் காலை நேரங்களில் அதிகளவில் உடற்பயிற்சி செய்து வந்த நிலையில், பணிக்கு செல்வோர் மற்றும் வயதானவர்கள் பயன்பெறும் வகையில் உடற்பயிற்சி கூடத்தை காலை 11 மணி வரை திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் கடந்த சில காலங்களாக உடற்பயிற்சி கூடம் காலை 11 மணி வரை செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது மாவட்ட விளையாட்டு அலுவலராக பணியாற்றி வரும் ஞான சுகந்தி, உடற்பயிற்சி கூடத்தின் செயல்பாட்டு நேரத்தை காலை 9 மணி வரை மட்டுமே என குறைத்து, இதுதொடர்பான அறிவிப்பை அண்ணா விளையாட்டு அரங்க வாயிலில் ஒட்டியுள்ளார்.

ஒரு வருடத்திற்கான சந்தா செலுத்தி பயிற்சி பெற்று வரும் நிலையில், தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி, 50-க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி கூட பயிற்சியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
அதனை தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் கூறுகையில்:-
மாவட்ட விளையாட்டு அலுவலரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தி, துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கம்போல் காலை 11 மணி வரை உடற்பயிற்சி கூடத்தை செயல்பட அனுமதிக்க வேண்டும். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞான சுகந்தி அண்ணா விளையாட்டு அரங்கத்தை அதிகாரப்பூர்வ நடைமுறைகளுக்கு மாறாக தனது குடும்ப சொத்து போன்று நடத்தி வருகிறார். இதுதொடர்பாக உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வரும் முதியவர் பாபு என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரினார். அதன் அடிப்படையில் கடந்த 7-ம் தேதி விஜிலென்ஸ் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று இரவு 9 மணியளவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்களை காவல்துறையினரை அழைத்து வெளியேற்றி உள்ளனர். அத்துடன், ஞான சுகந்தியின் கணவர் மூலம் அண்ணா விளையாட்டு அரங்கில் தினமும் பள்ளி மாணவிகளிடம் பணம் வசூலித்து, அரசிடம் உரிய அனுமதி பெறாமல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அண்ணா விளையாட்டு அரங்கில் மாணவ-மாணவிகளுக்கென போதிய கழிப்பறை வசதி இல்லை. தற்போது உள்ள கழிவறைகளும் மோசமான நிலையில் உள்ளது. மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் நிதி மற்றும் பங்களிப்புகள் உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை.

எனவே, இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடற்பயிற்சி கூடத்தை முன்பு போல காலை 11 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments