திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு; வறட்சி நிவாரணம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கோரிக்கை!எல்நினோ தாக்கம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை எதிர்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு விவசாய சங்க மாநிலப் பொருளாளர் அயிலை சிவசூரியன் தலைமையில், விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நேரில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் வறண்டு பாலைவனம் போல் காட்சியளிப்பதால், காவிரி கிளை கால்வாய்களிலுள்ள குறுவை சாகுபடிப் பயிர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வறட்சி பாதிப்புகளை ஆய்வு செய்ய தனி குழுக்கள் அமைத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சம்பா சாகுபடியை தொடங்க முடியுமா என்ற அச்சத்தில் உள்ள விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். வாழை, கரும்பு, வெற்றிலை கொடிக்கால், மலர் செடிகள் மற்றும் கோரை உள்ளிட்ட ஆண்டுப் பயிர்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை.

திருச்சி மாநகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் குடிநீர் தேவையை உடனடி நிவர்த்தி செய்யும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.புதிய வேலைவாய்ப்புத் திட்ட விதிமுறைகளால் கிராமப்புறங்களில் 10 முதல் 15 தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதால், பெரும்பாலான கூலித் தொழிலாளர் குடும்பங்கள் வருமானமின்றி சிரமப்பட்டு வருகின்றன. எனவே, அட்டை வைத்துள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10,000 அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.

கடும் வறட்சியால் பசுந்தீவனம் கிடைப்பது அரிதாகி, கால்நடைகளுக்குத் தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, கால்நடைகளைப் பாதுகாக்க அரசு குறைந்த விலையில் தீவனங்களை வழங்க வேண்டும்.வரவிருக்கும் வடகிழக்க பருவமழை காலத்தில் கிடைக்கும் மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தவிர்க்க வேண்டும். இதற்காக, மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களைத் தூர்வாரி ஆழப்படுத்துவதுடன், வரத்து மற்றும் வடிகால் கால்வாய்களைச் சீரமைக்கும் பணிகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும்.

கடுமையான வறட்சியை எதிர்கொள்ளும் வகையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்கும் சிறப்பு ஆய்வுக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.







Comments