எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா பாஸ்கர் அவர்களின் குடும்பத்தினர், கடந்த 20.01.2026 அன்று எனது அலுவலகத்தில் என்னை நேரில் சந்தித்து, சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வேலைக்குச் சென்று, ஷார்ஜாவில் தற்கொலை செய்து கொண்ட கருப்பையா பாஸ்கர் அவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர உதவி கோரினர்.
சுற்றுலா விசாவில் சென்றிருந்த காரணத்தாலும், அவர் வேலைக்காக அங்கு தங்கியிருந்த சூழ்நிலையாலும்,
சட்டப்பூர்வ நடைமுறைகள் மிகவும் சிக்கலானதாக இருந்த இந்த விவகாரம், குடும்பத்தினருக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியிருந்தது. அவர்களுக்கு ஆறுதல் கூறி, உடலை இந்தியாவிற்கு கொண்டு வர தேவையான முயற்சிகளில் நான் உடனடியாக ஈடுபட்டேன்.
இதுகுறித்து ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு உடனடியாக மின்னஞ்சல் மூலம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றேன்.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எங்கள் கட்சி சகோதரர்களிடம் இந்த விஷயத்தை தொடர்ந்து கவனித்து உதவுமாறும் கேட்டுக் கொண்டேன்.
எனது அலுவலகமும், கருப்பையா பாஸ்கர் அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, ஒவ்வொரு முன்னேற்றத்தையும் அவர்களிடம் தெரிவித்து வந்தது.
கருப்பையா பாஸ்கர் அவர்களின் உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்படவுள்ளது என்ற தகவல், இன்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் அவர்களின் நேர்முக செயலாளர் பிபுதி நாத் பாண்டே மூலம் மின்னஞ்சல் வழியாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இந்த தகவலை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டேன்.
பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, இன்று கருப்பையா பாஸ்கர் அவர்களின் உடல் பாதுகாப்பாக இந்தியாவிற்கு கொண்டு வரப்படவுள்ளது.
இந்த மனிதாபிமான முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகம், வெளிநாட்டிலுள்ள எங்கள் கட்சி சகோதரர்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு துணையாக நிற்பது எனது கடமை என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments