பல மொழிபேசும் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள் உள்ள நமது நாடாளுமன்றத்தின் அலுவல் தொடர்பிற்கு ஏன் ஒரு மொழி ஆதிக்கம்? இந்தியில் வந்த கடிதத்திற்கு ஆங்கிலத்தில் என் எதிர்ப்பு!
மக்களவை சபாநாயகரிடமிருந்து எனக்கோர் கடிதம் வந்தது. அது முழுக்க முழுக்க இந்தியில் இருந்தது. அதனை பார்த்து மிகுந்த கவலையுடன் சபாநாயகருக்கு என் கண்டனத்தை பதிவு செய்து ஆங்கிலத்தில் கடிதம் எழுதியுள்ளேன். அதன் தமிழாக்கம் இங்கே பகிர்ந்துளேன்.
மக்களவை சபாநாயகர் அவர்களே, ஒன்றிய பாஜக அரசு பகிரங்கமாக இந்தி திணிப்பை மேற்கொண்டு வருகிறது என்று நாங்கள் குற்றம் சாட்டுவதற்கான சாட்சியை நீங்களே வழங்கியுள்ளீர்கள். அதற்கு நீங்கள் எனக்கு அனுப்பிய கடிதம் தான் சாட்சி.
இந்தி பேசாத இந்திய மாநிலம் தமிழ்நாட்டிலிருந்து, தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று, அவர்களின் பிரதிநிதியாக, மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிக் கொண்டிருக்கும் எனக்கு, மக்களவை சபாநாயகரான தங்களிடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது.
Speaker, Lok sabha என்பது மட்டும் ஆங்கிலத்தில் உள்ளதால் குறைந்தபட்சம் உங்களிடமிருந்து தான் அக்கடிதம் வந்துள்ளது என்று என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், அதைத்தவிர அனைத்து வார்த்தைகளும், என் பெயர் உட்பட முகவரியும் இந்தியில் தான் இருக்கிறது.
முழுக்க முழுக்க இந்தியிலேயே இடம் பெற்றிருக்கும் ஒரு அதிகாரப்பூர்வமான கடிதத்தை எனக்கு அனுப்பி, எனது மொழி உணர்வை நீங்கள் காயப்படுத்தி உள்ளீர்கள் என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன்.
இதைத்தான் தமிழ்நாடு ஆண்டாண்டு காலமாக “இந்தித் திணிப்பு” என்று சுட்டிக்காட்டுகிறது; இந்தித் திணிப்பை மிக அழுத்தமாக எதிர்க்கிறது. நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால் இவ்வாறான இந்தித்திணிப்பை ஒரு போதும் ஏற்காதவர்கள் என்று பதிவுசெய்ய விரும்புகிறேன்.
இது ஒன்றிய அரசின் ஒரு அப்பட்டமான உரிமை மீறல் என்று குறிப்பிடுவதோடு, “வேற்றுமையில் ஒற்றுமை” என்று இந்தியா கொண்டிருக்கும் முதன்மையான கோட்பாட்டிற்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டுகிறேன்.
இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த மோசமான நடைமுறை ஒழிக்கப்பட்டு அனைவருக்கும் பொதுவான ஆங்கிலத்தில் மட்டும் தான் கடிதம் உள்ளிட்ட அனைத்து அதிகாரப்பூர்வ தகவல் பறிமாற்றம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இதுதான் இந்தியாவில் வாழும் அனைத்து மொழி பேசும் தேசிய இன மக்களின் எதிர்ப்பார்ப்பு ஆகும் என்று என் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன் என்று கூறினார் துரை வைகோ அவர்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments