த.வெ.க தலைவர் விஜய் தைரியம் இல்லாதவர். தெம்பும் திராணியும் இருந்தால் அவர் பெரம்பூர் தொகுதியை விட்டுவிட்டு திருச்சி கிழக்கு தொகுதியில் மட்டும் போட்டியிடட்டும் -இனிகோ இருதயராஜ் பேட்டி
திருச்சி கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இனிகோ இருதயராஜ் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவரை திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இனிகோ இருதயராஜ்,திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.முதலமைச்சர் கொண்டுவந்துள்ள திட்டங்கள் தமிழ்நாட்டில் கடைகோடி தமிழன் வரை சென்று சேர்ந்துள்ளது.ஐந்தாண்டுகள் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளேன்.

வீதி வீதியாக சென்று களப்பணியாற்றியுள்ளேன். அந்த தைரியத்தோடு சொல்கிறேன் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் நான் வென்றுக் காட்டுவேன்.2021 ஆம் ஆண்டு என்னை யார் என்று தெரியாத போது கிழக்கு தொகுதி மக்கள் எனக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெற செய்தார்கள். 54,000 வாக்குகள் வித்தியாசத்தில் அப்போது வெற்றி பெற்றேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் இருந்தது.மீண்டும் களப்பணியாற்றி வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வேன்.

த.வெ.க தலைவர் விஜய் தைரியம் இல்லாதவர். தெம்பும் திராணியும் இருந்தால் அவர் பெரம்பூர் தொகுதியை விட்டுவிட்டு திருச்சி கிழக்கு தொகுதியில் மட்டும் போட்டியிடட்டும் நிச்சயமாக நாங்கள் வென்று காட்டுவோம்.அறிவாலயத்தை தேவாலயம் ஒருபோதும் கைவிடாது. கிறிஸ்தவன் என்கிற காரணத்திற்காக விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவாரேயானால் அவர் கிழக்கு தொகுதி கிறிஸ்துவ மக்களையும் தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ மக்களையும் ஏமாற்ற முடியாது.அவர் போட்டியிடுவதற்கு முக்கிய காரணம் தைரியம் இல்லாததால் தான் அதனால்தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

நான் தொடர்ச்சியாக மக்களுக்காக களத்தில் இருந்து உள்ளேன். கிறிஸ்தவ மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.நாட்டில் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக பாசிச வாதிகள் செய்யும் ஒடுக்கு முறைக்கு எதிராக விஜய் குரல் கொடுத்தது கிடையாது. அவர்களுக்காக ஒரு நாளும் போராடியது கிடையாது. 2025 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவின்போது வட மாநிலங்களில் தேவாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட முடியாத நிலை ஏற்பட்டது அதனை கண்டித்து ஒரு அறிக்கை கூட விஜய் விடவில்லை.
வாய் மூடி மௌனியாக விஜய் இருக்கிறார். பாஜகவின் B டீமாகவே விஜய் செயல்பட்டு வருகிறார் அதுதான் நிதர்சனமான உண்மை என்றார்.
“விஜய்க்கு தைரியம் இருந்தால் திருச்சி கிழக்கில் மட்டும் போட்டியிடட்டும்” – இனிகோ இருதயராஜ் சவால்



Comments