திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்
பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணைகளை அகற்றவும், புதிய பண்ணைகள் அமைப்பதைத் தடுக்கவும் கோரி, நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருச்சி – நாமக்கல் பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஒன்றியம் வாளசிராமணி மற்றும் ஜடமங்கலம் ஆகிய கிராமங்களில், தனியார் நிறுவனம் ஒன்று கோழிப்பண்ணை அமைத்து தற்போது இயக்கி வருகிறது.
இதுமட்டுமின்றி, இப்பகுதியில் மேலும் பல கோழிப்பண்ணைகளை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனால் நிலத்தடி நீர் பாதிப்பு மற்றும் துர்நாற்றம், விவசாயம் பாதிப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படும் என இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் ஒன்றிய ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டித்தும், உடனடியாகக் கோழிப்பண்ணைகளை மூட வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருச்சி – நாமக்கல் சாலையில் திரண்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாத்தையங்கார்பேட்டை காவல் ஆய்வாளர் முத்தையன், உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் மற்றும் துணை வட்டாட்சியர் நடராஜன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதனையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments