திருச்சி மாவட்டம் மணப்பாறையில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்: மூதாட்டி மயங்கியதால் பரபரப்பு திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேட்டுக்கடை பகுதியில், மணப்பாறை – கோவில்பட்டி பிரதான சாலை ஓரத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் இன்று காலை முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ள இடத்திற்கு அருகில் ஆலயங்களும், பள்ளிக்கூடங்களும் உள்ளன. இதனால் அப்பகுதி வழியாகச் செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மற்றும் பெண்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. அரசு விதிகளின்படி, கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொடர் அலட்சியத்தைக் கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், இன்று காலை கடையின் முன்பு ஒன்று திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணப்பாறை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், இதுவரை பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கடையை அகற்றுவதற்கான உறுதியான எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

போராட்டம் நீடித்து வந்த நிலையில், அதில் பங்கேற்றிருந்த வள்ளிக்கண்ணு என்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சக பொதுமக்கள் அந்த மூதாட்டியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் போராட்டக்காரர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிகாரிகளின் மெத்தனப் போக்காலேயே இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறி, மக்கள் தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தற்போது வரை அப்பகுதியில் போராட்டம் தொடர்வதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube






Comments