திருச்சி : பெண்கள் மீதான அடக்குமுறைகள் குறித்த உண்மையான நிலவரத்தை எடுத்துரைக்கும் வகையிலேயே ராகுல் காந்தி மனுஸ்மிருதியை சுட்டிக்காட்டி பேசினார். அதை இந்து மதத்திற்கு எதிரான கருத்தாக பாஜக திரித்துள்ளது – மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் திருச்சி விமான நிலையத்தில் பேட்டி.திருச்சி விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில்:-

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறவில்லை. எஃப்சிஆர்ஏ, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்களை மத்திய அரசு பின்வாசல் வழியாக முன்னெடுக்க முயன்றது. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. மாணவர்கள் போராட்டம் மற்றும் நீட் தேர்வு முறைகேடு, அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் உரிய விவாதம் நடைபெறவில்லை. இது குறித்து பதிலளிக்க தைரியம் இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.
பெண்கள் மீதான அடக்குமுறை குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் நோக்கத்துடன் உள்ளது. மத நூல்கள் அனைத்தும் வெவ்வேறு காலகட்டங்களில் அந்தந்த சமூகச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எழுதப்பட்டவை. சில மத நூல்களில் பெண்களுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்கும், விடுதலைக்கும் தடையாக இருக்கும் பழமைவாத சிந்தனைகளை பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இந்தியாவில் பெண்களுக்கு ஆரம்பத்திலேயே வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் காந்தி, நேரு, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் உறுதியாக இருந்தனர். அதன் காரணமாகவே பல நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படாத காலத்திலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
பெண்கள் மீதான அடக்குமுறைகள் குறித்த உண்மையான நிலவரத்தை எடுத்துரைக்கும் வகையிலேயே ராகுல் காந்தி மனுஸ்மிருதியை சுட்டிக்காட்டி பேசினார். அதை இந்து மதத்திற்கு எதிரான கருத்தாக பாஜக திரித்துள்ளது.பிரதமர் மோடிக்கு கலர் கலரான ஆடைகளை அணிந்து, வீடியோ வெளியிட்டு ஜென்சி இளைஞர்களை ஈர்க்க முயற்சிக்கின்றனர். மோடியை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டங்களில் ஜென்சி இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றனர். பிரதமர் கூறிய கருத்துகள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை என நினைக்கக்கூடாது. தற்போதைய அரசின் செயல்பாடுகளை ஜென்சி இளைஞர்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர். அவர்களின் அழுத்தத்தின் காரணமாகவே மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே தரம் தாழ்ந்த விவாதங்கள் நடைபெறுவது வருத்தமளிக்கிறது. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, சட்டப்பேரவைக்குள் எவ்வாறு பேச வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சபாநாயகர் சார்பில் முறையான பயிற்சி அல்லது வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்த வேண்டும். மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் சட்டப்பேரவையில் ஒரு தரத்தை நிர்ணயிக்க வேண்டும். இளம் உறுப்பினர்கள் அதனை பின்பற்ற வேண்டும்.தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்.கூட்டணி கட்சிகள் பொதுமக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை முன்வைக்கும் போது, அவற்றை அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய விளக்கம் அளிப்பது அரசுக்கே நல்லது.
விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்:— தலைவரை மகிழ்விப்பதற்காக அமைச்சர்கள் இதுபோன்று பேசுவது தேவையற்றது. தமிழக அரசுக்கு இன்னும் மூன்று மாதங்கள் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், இதுபோன்ற அரசியல் விவாதங்கள் தேவையில்லை. தமிழகத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை, போதைப்பொருள் பிரச்சினை, மின்சார பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் உள்ளது. அவற்றை தீர்ப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டை மீண்டும் ஒரு பெரிய வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு என்று தெரிவித்தார்.
பேட்டி: கிறிஸ்டோபர் திலக், எம்பி

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav






Comments