இரண்டு ரூபாயில் இயற்கை நாப்கின்கள்! திருச்சி கல்லூரி மாணவர்கள் அசத்தல்!!

இரண்டு ரூபாயில் இயற்கை நாப்கின்கள்! திருச்சி கல்லூரி மாணவர்கள் அசத்தல்!!

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தாவரவியல் இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்களுடைய இறுதி ஆண்டு பிராஜக்ட்காக சீமை கற்றாழை நார்களை பயன்படுத்தி நாப்கின்களை தயாரித்துள்ளனர்.

மலைவாழ் பகுதியில் வசிக்கும் பெண்கள் தங்களுடைய மாதவிடாய் காலங்களில் சீமை கற்றாலை செடிகளின் நார்களை துணிகளுடன் வைத்து பயன்படுத்தியதாகவும், கள ஆய்வில் இது குறித்து தெரிந்து கொண்டு, அதை ஒருபடி மேம்படுத்தி நாப்கின்களாக தயாரித்துள்ளதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

சீமை கற்றாழை வகையைச் சேர்ந்த இந்தச் செடிகளிலிருந்து முதலில் நார்களை பிரித்தெடுத்து, சற்று கடினமாக உள்ள அந்த நாரை மென்மைபடுத்துவதற்காக சோடியம் ஹைட்ராக்சைடில்(NAOH) நனைத்து, அந்த நார்களையும் பஞ்சையும் அடுக்குகளாக வைத்து இந்த நாப்கின்களை தயாரிக்கின்றனர்.இறுதியில் இந்த நாப்கின்களை யுவி கதிர்கள் என்று சொல்லப்படும் புறஊதாக்கதிர்களின் உதவியுடன் பயன்பாட்டிற்கு உகந்த சுகாதார முறையில் தயாரித்து முடிக்கின்றனர்.

Advertisement

இதற்கென முதலில் இந்த நார்களை பிரித்தெடுத்து, இதனுடைய உறிஞ்சும் தன்மையை பரிசோதித்ததாகவும், பிறகு இந்த கற்றாழை செடிகளில் இயற்கையாகவே நோய்க்கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளதை கண்டறிந்ததாகவும், இதற்காக FTIR எனப்படும் உறிஞ்சி தன்மையை பரிசோதித்த பிறகே இந்த நார்களை பயன்படுத்தி நாப்கின் தயாரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் மாணவர்கள்.

சாதாரண நாப்கின்கள் 7 மில்லி மட்டுமே உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளதாகவும், சீமை கற்றாழை நார்களை பயன்படுத்தி தயாரித்துள்ள இந்த நாப்கின் 13 மில்லி வரை உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளதாகவும், நாப்கின் பயன்படுத்தும் போது ஏற்படும் அலர்ஜி, தான் இதை பயன்படுத்தி பார்க்கையில் ஏற்படவில்லை என தெரிவிக்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள மாணவி புவனேஸ்வரி.

மற்ற நாப்கின்களில் நெகிழிப் பொருட்கள் உள்ளதால் அவை மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்றும், ஆனால் இந்த நாப்கின் முழுவதும் இயற்கை மூலப் பொருட்கள் என்பதால், விரைந்து மக்கும் தன்மையை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார் இம்மாணவர்களின் பேராசிரியர்.இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இந்த நாப்கின்களை தயாரிப்பதற்கான இயந்திரத்தையும் இவர்களே வடிவமைத்துள்ளதாகவும், எளிதில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியுமென்கின்றனர் மாணவர்கள்.

சாதாரணமாக நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தின் மதிப்பு 50,000 ரூபாய் வரை இருக்கும் நிலையில், 15 ஆயிரம் ரூபாய் பொருட்செலவில் இந்த இயந்திரத்தை வடிவமைத்து உள்ளதாக கூறும் மாணவர்கள், ம இந்த இயந்திரம் சுய தொழில் செய்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்கின்றனர்.ஏற்கனவே இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டுள்ள நாப்கின்கள் 59 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், இந்த ஒரு நாப்கின் விலை இரண்டு ரூபாய் மட்டுமே என்று தெரிவிக்கின்றனர்.

இயற்கையோடு இணைந்த, சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய ,குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடிய இந்த நாப்கின்களை, குறிப்பாக கிராமப்புற, மலைவாழ் மக்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளதாகவும், சுயதொழில் செய்கின்ற திருநங்கைகள் போன்றோருக்கு இது உதவும் என்றும் தெரிவிக்கின்றனர் மாணவர்கள்.

சுற்றுச்சூழலுக்கும் பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு நாப்கின்களை தயாரித்துள்ள மாணவர்களுடைய முயற்சி பாராட்டுக்குரியது.