முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. மேலும் அந்த மலை மீது சிக்கந்தர் தர்காவும் அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலையில் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி பார்வையிட்டார்.

அப்போது எம்பியுடன் வந்தவர்கள் மலைப்பகுதியில் அசைவ உணவு சாப்பிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனையடுத்து திருப்பரங்குன்றம் மலை பிரச்சினை, சர்ச்சையானது. இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் நாளை (பிப்.4) போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தனர். இதனால் மதுரை மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து திருச்சியில் பாஜக மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜன், மதுரையில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அவரது வீட்டில் இருந்து வெளியே வந்த போது, காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி வீட்டு காவலில் வைத்துள்ளனர். மேலும் அவரது வீட்டின் முன்பு காவலர்கள் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பாஜக மாநில இளைஞரணி பொது செயலாளர் கௌதம் நாகராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்… நாங்கள் குடும்பத்துடன் திருமண நிகழ்வுக்கு சென்ற போது காவல்துறையினர் பின் தொடர்ந்து வந்து கைது செய்வதாக கூறினர். நாங்கள் வீட்டிற்கு செல்கிறோம் என கூறிய பின்னர் வீட்டிற்கு செல்லுங்கள். ஆனால் வெளியே எங்கும் செல்லக்கூடாது. தற்போது வீட்டு காவலில் உங்களை வைத்துள்ளோம் என கூறினர். திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள கூடாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அது முழுக்க முழுக்க இந்துக்களுக்கு சொந்தமான இடம். அங்கு ஆடு வெட்டுவது, போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என திருப்பரங்குன்றம் செல்ல இருந்தோம். இந்த அரசாங்கம் மனசாட்சி இல்லாத அரசாங்கமாக உள்ளது. இது சுதந்திர நாடா? இல்லை பாகிஸ்தானா என தெரியவில்லை. மதுரைக்கு எதற்காக 144 தடை உத்தரவு என தெரியவில்லை. தேர்தலை விட மோசமாக உள்ளது.

இந்துக்களுக்கு சுதந்திரம் இல்லாத அரசாக திமுக அரசு உள்ளது. இன்று இல்லை, நாளை இல்லை என்றாலும் கண்டிப்பாக ஒரு நாள் சூரசம்காரம் திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments