புனித வளனார் (St. Joseph’s College) கல்லூரியில் “TRI FEST 2025” என்ற முப்பெரும் விழா- சிறப்பு விருந்தினராக துரை வைகோ

திருச்சி மாநகரின் பெருமை மிகு கல்வி நிறுவனமாக புனித வளனார் (St. Joseph’s College) கல்லூரியில் டவுலோஸ் அரங்கத்தில், இன்று (04.07.2025) காலை 10.45 மணியளவில் நடைபெற்ற “TRI FEST 2025” என்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினேன்.
புனித ஜோசப் கல்லூரி, வெறும் கல்வி நிறுவனம் மட்டுமல்ல. இந்த கல்லூரிதான் பல சகாப்தங்களை படைத்த வல்லுனர்களையும் பல தலைவர்களையும் உருவாக்கியது என்று நினைவூட்டினேன்.இன்றும் கூட புனித ஜோசப் கல்லூரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இது ஒருபோதும் அதன் நோக்கத்தை மறக்கவில்லை. புனித ஜோசப் கல்லூரியின் நோக்கம் அதன் முழக்கத்தில் உள்ளது: “Pro Bono et Vero” இது ஒரு லத்தீன் மொழி வாக்கியமாகும், இதன் பொருள் “நன்மைக்காகவும் உண்மைக்காகவும்” என்பதாகும்.
நன்மை என்பது உங்கள் பெற்றோரை, உங்கள் சக மனிதர்களை, உங்கள் பூமியை, மற்றும் கடவுள் படைத்த அனைத்தையும் பேணுவது. உண்மை என்பது உங்கள் தேர்வுகளில், உங்கள் உறவுகளில், மற்றும் முக்கியமாக உங்கள் லட்சியங்களில் நேர்மையாக இருப்பது. இந்த இரண்டு மதிப்புகளையும்; நன்மையையும் உண்மையையும் நீங்கள் எடுத்துச் சென்றால், எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தாலும், நீங்கள் ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள். எனவே, நன்மையாக இருங்கள், உண்மையாக இருங்கள் என்று மாணவச்செல்வங்களுக்கு எடுத்துரைத்தேன்.
இன்று நாம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவத் தலைவர்கள் பதவியேற்பதைக் கண்டோம். அவர்கள் ஒரு தார்மீகப் பொறுப்பை, சரியான பாதையில் தங்கள் சக மாணவர்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றனர். தலைமைத்துவம் என்பது பட்டங்களைப் பற்றியது அல்ல, அதிகாரப் பதவிகளைப் பற்றியது அல்ல, அது தொலைநோக்கு துணிவு மற்றும் அனுதாபத்தை பற்றியது.தொலைநோக்கு என்பது பொதுவாக மக்கள் பார்க்க முடியாதவற்றை முன்கூட்டியே பார்க்கும் திறன். துணிவு என்பது சரியான பக்கம் ஆதரவாய் நிற்பதற்கு தயாராக இருப்பது. அனுதாபம் என்பது மற்றவர்களின் உணர்வுகளையும் துயரங்களையும் புரிந்துகொள்ளும் திறன்.
இந்த உலகத்தை மேம்படுத்துவதற்காக நாம் இந்த தொலைநோக்கு, துணிவு மற்றும் அனுதாபத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். மாணவர் இயக்கங்கள் எப்போதும் மாற்றத்தின் அறிகுறியாக இருந்து வந்துள்ளன என்று உலக மாணவர் இயக்க வரலாற்றை தொட்டுப்பேசினேன்.நமது தமிழ்நாட்டிலும் 1960களில் மாணவர் இயக்கங்களால் உருவான மாற்றங்களை குறிப்பிட்டு மாணவர் இயக்கங்களின் முக்கியத்துவத்தை விளக்கினேன்.
இன்று இந்த அற்புதமான, வரலாற்றுச் சிறப்பும் மதிப்பும் மிக்க புனித ஜோசப் கல்லூரியில் நிற்கும் உங்களைப் பார்க்கும்போது, நம்பிக்கையைக் காண்கிறேன். மிகவும் விழிப்புணர்வு மற்றும் இரக்கமுள்ள ஒரு எதிர்கால தலைமுறையைக் காண்கிறேன். இளம் இதயங்கள், நாட்டின் எதிர்காக கட்டமைப்பாளர்கள், நாளைய சமுதாயத்தை உருவாக்குபவர்கள், மாற்றத்தை ஏற்படுத்துபவர்களும் ஆவீர்கள். இப்போது நான் விடைபெறுவதற்கு முன், ஒரு கேள்வியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்: இந்தக் கல்லூரியை விட்டு வெளியேறும்போது, நீங்கள் எதை எடுத்துச் செல்வீர்கள்? நிச்சயமாக ஒரு பட்டம், நிச்சயமாக ஒரு வேலை வாய்ப்பு, ஆனால், அதற்கும் மேலாக, இந்தக் கல்லூரியை விட்டு வெளியேறும்போது, நன்மையாக இருக்கும் துணிவையும், உண்மையாக இருக்கும் வலிமையையும் எடுத்துச் செல்வீர்கள் என்று நம்புகிறேன்.
“நன்மைக்காகவும் உண்மைக்காகவும்” என்ற உங்கள் கல்லூரியின் முழக்கம், உங்கள் வாழ்க்கையின் திசைகாட்டியாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியைக் காண்பீர்கள். நீங்கள் ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள். கடவுள் உங்களை எல்லாம் ஆசீர்வதிப்பாராக என்று என் உரையை நிறைவுசெய்தேன்.இவ்விழா, மாணவர் கவுன்சில் பதவியேற்பு விழா, புதிய மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் நுண்கலைச் சங்க நடவடிக்கைகளின் தொடக்கம் ஆகிய மூன்று நிகழ்வுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களின் பேரார்வம் மற்றும் பேராசிரியர்களின் நன்மதிப்பு என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டேன்.எனக்கு இது ஒரு நினைவுகொள்ளத்தக்க நிகழ்வாக அமைந்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
உடன் கழக துணை பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா சோமு, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் டி டி சி சேரன், இளைஞர் அணி செயலாளர் ஆசைத்தம்பி, மாணவரணி செயலாளர் பால. சசிகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் தோழர்கள் உடன் இருந்தனர். என்று துரை வைகோ அவர்கள் கூறினார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






