நேற்று நாடாளுமன்ற மக்களவையில் பெண்கள் இட ஒதுக்கீடு, மக்களவை இடங்கள் அதிகரிப்பு மற்றும் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்ற நிகழ்வை பற்றி துரை வைகோ அவர்கள் கூறியதாவது.நள்ளிரவு 12 மணிக்கு எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் வரை காத்திருந்து, நான் அம்மசோதாக்கள் குறித்து உரையாற்றினேன். அப்போது எதை, ஏன் ஆதரிக்கிறோம்; எதை, ஏன் எதிர்க்கிறோம் என்றும் விளக்கமாக எடுத்துரைத்தேன்.

இன்றைய பெண்கள் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்கள் அல்லர். மாறாக, கிராமங்களிலிருந்து உலக நிறுவனங்களின் நிர்வாக சபை வரை சென்று, நம் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த முன்னேற்றம் நமது நாடாளுமன்றத்தில் இன்னும் பிரதிபலிக்கவில்லை. அங்கு பெண்களின் பங்களிப்பு இன்னும் மிகவும் குறைவாகவே உள்ளது.தற்போதைய 18வது மக்களவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் வெறும் 14 விழுக்காடு மட்டுமே. இது முன்மொழியப்பட்ட 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை விடவும் குறைவு. உலக சராசரியை விடவும் இது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். துரதிர்ஷ்டவசமாக, நமது நாட்டுப் பெண்களுக்கு, நமது தாய்மார்களுக்கு, மகள்களுக்கு, சகோதரிகளுக்கு நீதி இன்னும் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.கடந்த 2010ஆம் ஆண்டிலேயே மாநிலங்களவையில் ஏற்கப்பட்டு, மக்களவையில் விவாதிக்கப்பட்ட ‘பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா’ 15 ஆண்டுகளாகியும் இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை.தற்போதைய ஒன்றிய பாஜக அரசு பல ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வந்தது. எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தத்தின் காரணமாகவே, 2023ஆம் ஆண்டு அவசர அவசரமாக ஒரு புதிய மசோதாவைக் கொண்டு வந்தது. ஆனால், அதை 2027ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றுடன் இணைத்து வைத்துள்ளது.

உண்மையில், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே உடனடியாக இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அதைச் செய்யாமல், இப்போது பாஜக அரசு தன் முந்தைய நிலைப்பாட்டை முழுமையாக மாற்றி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பெண்கள் இட ஒதுக்கீடு, மக்களவை இடங்கள் அதிகரிப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்த முடிவு செய்துள்ளது.இந்த பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு மசோதாவை சர்ச்சைக்குரிய தொகுதி மறுவரையறை மசோதாவோடு இணைக்காமல் தனியாக நிறைவேற்றலாம். ஆனால், ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்ளும் இந்த இணைப்பு நடவடிக்கையை நான் அரசியல் சூழ்ச்சியாகவே கருதுகிறேன்.

மேலும், தொகுதி மறுவரையறை மசோதா, முன்னேறிய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என்று நான் எனது கவலையையும் அச்சத்தையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் மக்கள் தொகையை மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டின் தற்போதைய மொத்த பிறப்பு விகிதம் (TFR) 1.8க்கும் குறைவாக உள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், திராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கையின் மூலம் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் தமிழ்நாடு நாட்டுக்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 9 விழுக்காடு தமிழ்நாடு பங்களிக்கிறது. இதேபோல், பிற தென்னிந்திய மாநிலங்களும் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. இந்நிலையில், மக்கள் தொகையின் அடிப்படையில் மட்டும் தொகுதிகளை மறுவரையறை செய்வது, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய முன்னேறிய மாநிலங்களுக்கு தண்டனையும், மக்கள் தொகையைக் குறைக்கத் தவறிய மாநிலங்களுக்கு பரிசும் பாராட்டும் அளிப்பது போன்ற அநீதியான நிலைக்கு இட்டுச் செல்லும்.

எனவே, மக்களவையில் தமிழ்நாட்டின் தற்போதைய 7.18 விழுக்காடு விகிதாச்சாரம் எக்காரணம் கொண்டும் குறையாது என்பதை ஒன்றிய அரசு தெளிவாக உறுதி செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.மக்கள் தொகையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தொகுதிகளை மாற்றியமைப்பது, கூட்டாட்சித் தத்துவத்துக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது. என்று துரை வைகோ அவர்கள் தான் பாராளுமன்றத்தில் உரையாற்றியதை பத்திரிக்கையாளர்களுக்கு எடுத்துரைத்தார்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
“பெண்கள் இடஒதுக்கீட்டை அரசியல் சூழ்ச்சியுடன் இணைக்காதீர்கள்” – துரை வைகோ



Comments