திமுக அரசுக்கு இருந்த கஷ்டம் போல் எந்த காலத்திலும் அரசாங்கத்திற்கு கஷ்டம் வந்ததில்லை -கே.என்.நேரு

தற்போதைய திமுக அரசுக்கு இருந்த கஷ்டம் போல் எந்த காலத்திலும் அரசாங்கத்திற்கு கஷ்டம் வந்ததில்லை - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள முத்தப்புடையான்பட்டியில் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102 வது பிறந்தநாள்
விழா மற்றும் தமிழக அரசின் நான்காண்டு கால சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. திமுக கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கலந்துகொண்டு பேசியபோது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் 110 விதிகளின் கீழ் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டும் நிறைவேற்றப்படாததை ஆட்சிக்கு வந்து நான்கே ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றி தந்துள்ளது.
பெரியபட்டி பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது கண்ணுடையான்பட்டி மற்றும் சமுத்திரம் ஆற்றுப்பாலங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதன் மூலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு பேசுகையில், நாங்கள் மீண்டும் சேரவே மாட்டோம் என்ற அதிமுகவினர் தற்போது மீண்டும் பிஜேபியோடு கூட்டணி வைத்துள்ளனர். தங்கள் மீதான வழக்குகளை முடித்துக் கொள்வதற்காக கட்சியை அடகு வைத்துள்ளனர்.
மற்றொரு பக்கம் நமது கூட்டணி கடந்த 8 ஆண்டுகளாக பிரியாத கூட்டணியாக வலுவாக உள்ளது. மற்றொருவர் தமிழ்நாட்டில் புதிதாக வந்துள்ளார் அவர் வரும்போதே நான்தான் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள். இப்போது இருந்த கஷ்டம் போல் எந்த காலத்திலும் அரசாங்கத்திற்கு கஷ்டம் வந்ததில்லை. ஒருபுறம் கடந்த அதிமுகவின் நிர்வாகம் சரி இல்லாத காரணத்தால் நிதிநிலைமை மிகவும் மோசமாக இருந்தது. மற்றொருபுறம் கோரோனா வந்துவிட்டது. இரண்டு ஆண்டுகள் அதற்காகவே செலவு செய்ய வேண்டியதாகி விட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிய அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய எந்த நிதியையும் வழங்கவில்லை. 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி, புதிய பள்ளிகள் கட்டுவதற்கு 2000 கோடிம், குடிநீர்த்திட்டமான ஜல் ஜீவன் திட்டத்திற்கு நமக்கு தரவேண்டிய 3500 கோடியை தராமல் நிறுத்திவிட்டனர். தற்போது இந்த ஆண்டு 4000 கோடியையும் தரவில்லை. ஒவ்வொரு முறையும் போராடி போராடித்தான் ஒன்றிய அரசிடமிருந்து நிதியைப் பெறவேண்டிய நிலை இருக்கிறது.
கடுமையான நிதி நெருக்கடியிலும் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி மற்ற மாநிலங்களை காட்டிலும் மிகச் சிறப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் செயலாற்றி காட்டியுள்ளார். என்றார். இதில் தலைமைக் கழக பேச்சாளர்கள் ஆடுதுறை.உத்திராபதி, ஷேக்அலிமாஸ்அலி, ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் சந்திரசேகர், மணப்பாறை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த ஆரோக்கியசாமி, ஆகியோர் சிறப்புறையாற்றினர். கூட்டத்தில் திமுகவினர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய...
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






