மயான வசதி இல்லாததால் இறந்தவர் உடலுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களால் பரபரப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே மயான வசதி இல்லாததால் இறந்தவர் உடலுடன் மறியல் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.-போராட்டத்தை தடுத்த போலீசாருடன் மல்லுக்கட்டிய கிராம மக்கள்*
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கோவத்தக்குடி கிராமத்திற்கும், அருகில் உள்ள கடுக்காய்த்துரை என்ற இரு கிராமத்திற்கும் கோவத்தகுடி கிராமத்தில் கடந்த 80 ஆண்டுகளாக சுடுகாடு இருந்து வந்துள்ளது.இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவத்தக்குடி கிராமத்தினர் பயன்படுத்தி வந்த சுடுகாடு இடங்களை தனிநபர் ஒருவர் தனது பெயரில் பட்டா இருப்பதால் அதனை யாரும் பயன்படுத்த கூடாது என நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியுள்ளார்.
இதனால் எழுந்த பிரச்சினையின் காரணமாக அப்போதைய மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் புள்ளம்பாடி ஆற்று கரையோரத்தில் இறந்தவர் உடலை நல்லடக்கம் செய்ய அறிவுறுத்தியுள்ளார்.ஆனால் அந்த பகுதியில் வெவ்வேறு மூன்று பிரிவினர் பயன்படுத்தி வருவதால் அடிக்கடி பிரச்சினை நடப்பதாக கோவத்தகுடி கிராம மக்கள் அவர்கள் ஊரிலேயே இறந்தவர் உடலை நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத சூழலில் கோவத்தக்குடி கிராமத்தில் முதியவர் ஒருவர் இறக்கவே அவரது உடலை கோவத்தகுடியில் உள்ள அரசு புறம்போக்கு நிலமாகவும் தற்போது கடுக்காய்த்துரை கிராமத்தினர் பயன்படுத்தி வரும் மயானத்தில் எரிப்பதற்காக ஏற்பாடு செய்துள்ளனர் கோவத்தகுடி கிராமத்தினர்.இதுகுறித்து தகவல் அறிந்த கடுக்காய்துரை கிராமத்தினர் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த கோவத்துகுடி கிராம மக்கள் இறந்தவர் உடலை சாலையின் குறுக்கே வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாலை 4 மணிக்கு போராட்டம் தொடங்கிய நிலையில் தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என உறுதியாக இருந்த கோவத்தகுடி பொதுமக்கள் கோட்டாட்சியர் வந்து நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கும்வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் இறந்தவர் உடலை அப்புறப்படுத்தி போராட்டத்தை கலைக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளு செய்து மல்லு கட்டினர். தொடர்ந்து இரவு 7 மணி வரை போராட்டம் தொடர்வதை அறிந்த லால்குடி கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஒரு வருடத்திற்குள் உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும்.
அதுவரை கடுக்காய்த்துரை கிராமத்தினர் பயன்படுத்தும் மயானத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கோவத்தகுடி கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு இறந்தவர் உடலை நல்லடக்கம் செய்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






