திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ , தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (04.06.2026) மாலை 5 மணிக்கு அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது, திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, விவசாயிகள் நலன் மற்றும் பொதுமக்களின் நீண்டநாள் தேவைகள் தொடர்பான முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை முதலமைச்சரிடம் வழங்கி, அவர் விரிவாகக் கலந்துரையாடினார்.
அன்போடு வரவேற்று நலம் விசாரித்த முதலமைச்சரிடம், திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களின் மேம்பாட்டிற்காக நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த 12 முக்கிய கோரிக்கைகளின் விவரம் பின்வருமாறு:

திருச்சி தமிழ்நாட்டின் புவியியல் மையமாக அமைந்துள்ளதுடன், மாநிலத்தின் அனைத்து பகுதிகளுடனும் சிறந்த சாலை, இரயில் மற்றும் விமான இணைப்புகளைக் கொண்ட மாநகரமாக திகழ்கிறது. இதனால், அரசியல் மற்றும் சட்டமன்ற நிர்வாக மையமாக செயல்படுவதற்கு மிகவும் ஏற்ற மாநகரமாக இருக்கும் என்பதை எடுத்துரைத்து, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய முக்கியமான பரிந்துரையாக, திருச்சியை தமிழ்நாட்டின் இரண்டாம் தலைநகரமாக அறிவிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
மத்திய தமிழ்நாட்டின் வளர்ச்சியின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டத்தின் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், திருச்சியை கும்பகோணம் கோட்டத்திலிருந்து பிரித்து, திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு தனியான தமிழ்நாடு அரசு (TNSTC) போக்குவரத்துக் கழகம் அமைத்து தர வேண்டும்.

68 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் (சமயபுரம்–தில்லைநகர்–வயலூர், துவாக்குடி–பஞ்சப்பூர், ஜங்ஷன்–விமான நிலையம்–மாத்தூர்) திருச்சி மாநகரத்திற்கு மெட்ரோ இரயில் திட்டத்தை ஆய்வு செய்து விரைவில் நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் நாடு முழுவதும் ஐந்து பல்கலைக்கழக நகரங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஒன்றை திருச்சியில் அமைப்பதை மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும். திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே NIT, IIM, BIM, IIIT, TNNLU மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் போன்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், இங்கு பல்கலைக்கழக நகரம் அமைக்கப்படுவது உயர்கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும்.

திருச்சி – மணப்பாறை தொழிற்சாலை சிப்காட்டை உலகளாவிய மின்னணு மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையமாக உருவாக்க வேண்டும். ஒன்றிய அரசின் 2026 பட்ஜெட்டில் ₹40,000 கோடி ஒதுக்கீட்டுடன் அறிவிக்கப்பட்டுள்ள
இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 2.0 திட்டத்தின் கீழ், திருச்சி – மணப்பாறை சிப்காட்டை செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உற்பத்தித் துறையின் முக்கிய மையமாகத் தேர்வு செய்து மேம்படுத்தினால், அது பெரும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களின் தொழில் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய உலர் துறைமுகம் (Dry Port) அமைக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து ஒன்றிய நிதி அமைச்சர், ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் மற்றும் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடி ஒப்புதல் பெற்றுள்ள விபரத்தையும் முதலமைச்சரிடம் விளக்கினார்.

திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது 95% நிறைவடைந்துள்ளது. ஓடுபாதை விரிவாக்கத்திற்குத் தேவையான மீதமுள்ள 7.67 ஏக்கர் நிலம், வழிகாட்டி மதிப்பு (GLV) திருத்தம் நிலுவையில் இருப்பதால் இன்னும் கையகப்படுத்தப்படவில்லை. வழிகாட்டி மதிப்பு திருத்த அறிக்கைக்கு தமிழக அரசு விரைவில் ஒப்புதல் வழங்கினால், நிலம் கையகப்படுத்தும் பணி முழுமையாக நிறைவடைந்து, இந்திய விமான நிலைய ஆணையம் சுமார் ₹350 கோடி மதிப்பிலான ஓடுபாதை விரிவாக்கப் பணிகளை விரைவாக தொடங்க முடியும் என்பதால், இதற்காக முதலமைச்சரின் உடனடி தலையீடும் ஒப்புதலும் கோரப்பட்டது.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பழமையான கட்டிடங்களில் இயங்கி வருவதுடன், விரிவாக்கத்திற்குத் தேவையான நிலப்பரப்பும் இல்லாத நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் நீர் தேக்கம் ஏற்படும் அபாயமும், போக்குவரத்து நெரிசலும் உள்ளதால், பொதுமக்கள் நலன் கருதி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் அருகிலுள்ள பஞ்சக்கரை பகுதியில் உள்ள அரசுச் சொந்த நிலத்திற்கு மருத்துவமனையை மாற்றி அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் தற்போது செயல்பட்டு வரும் தாய்-சேய் நலக் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அதனை அகற்றி அதே இடத்தில் புதிய MCH கட்டிடம் அமைக்க வேண்டும். மாற்றியமைக்கப்பட்ட மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளித்து, தேவையான நிதியை விரைந்து ஒதுக்கி கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டத்திற்குட்பட்ட கடலையூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களின் அடிக்கடி ஏற்படும் மின்தடை மற்றும் பராமரிப்பு சிரமங்களை போக்க, கடலையூரில் 33/11 கே.வி. துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். இதற்காக சமூக ஆர்வலர் அ. மாரியப்பசாமி தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கியுள்ளதுடன், அதற்கான ஒப்புதலையும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே வழங்கியுள்ளதால், பணிகளை விரைவில் துவங்க வேண்டும்.
விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், பருத்தி அரவையாளர்கள் மற்றும் வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, பருத்தி விதைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் கட்டணத்தை ரத்து செய்து அவர்களின் பொருளாதாரச் சுமையை குறைக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவதற்கான விரிவான திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். இதற்காகத் தலைவர் வைகோ வழக்குத் தொடர்ந்து, வாதாடி பெற்றுத்தந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி, நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விவசாய நிலங்களின் வளத்தைப் பாதுகாக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வளர்ச்சி, விவசாயிகளின் நலன், தொழில் முன்னேற்றம் மற்றும் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகள் அனைத்தையும் முதலமைச்சர் கனிவுடன் கேட்டறிந்து, உரிய பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
சந்திப்பிற்குப் பின் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, மக்களின் குரலை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண தொடர்ந்து பாடுபடுவதும் எனது கடமையாகும். அந்தப் பொறுப்புணர்வோடு முதல்வரை சந்தித்தேன். மிக நல்ல சந்திப்பாக அமைந்தது. எனது திருச்சி தொகுதியின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் தொடர்ந்து செயலாற்றுவேன் என்று தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments