G கார்னரில் சுரங்கப்பாதை அமையும் வரை எனது தொடர் முயற்சிகள் தொடரும்- துரை வைகோ

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள G கார்னர் பகுதியில் வாகன சுரங்கப்பாதை அமைத்து தந்திட வேண்டி, மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிட எனது தொடர் முயற்சியில் ஒரு முக்கிய நிகழ்வாய் அமைந்தது இன்றைய சந்திப்பு.
மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் உள்ள G - கார்னர் பகுதியில், சர்வீஸ் சாலை இருவழிப்பாதையாகவும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கனரக வாகனங்களும் பேருந்துகளும் உள்ளே வரும் நுழைவுப் பகுதியாகவும் இருப்பதால் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறும் கருப்பு பகுதியாக (Black spot) சுட்டிக்காட்டப்படுகிறது.
தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்ற சாலையாகவும், பல கல்வி நிறுவனங்களும், தென்னக இரயில்வே - பொன்மலை பணிமனையில் பணிபுரியும் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்களும் பயன்படுத்தி வருகின்ற முக்கியமான சந்திப்பாகவும் உள்ளது.
இதுவரை விபத்துகளால் பல மனித உயிர்கள் பறிபோயிருக்கும் இந்தப் பகுதியில் தினம் தினம் விபத்துகளும், காயங்களும், தப்பித்து உயிர்ப்பிழைப்பதும் வாடிக்கையாக நிகழ்வதை தவிர்ப்பதற்காக கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள், பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதற்கு தீர்வு எட்டப்பட்டே ஆகவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எனது தொடர்முயற்சிகளைப் மேற்கொண்டுவருகிறேன்.
முதலில், 11.01.2025 அன்று நடைபெற்ற DISHA இரண்டாவது கூட்டத்தில் G - கார்னர் பகுதியில் சுரங்கபாதை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே நான் திருச்சி இரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை அளித்திருந்ததையும் சுட்டிக்காட்டி பேசினேன்.
அடுத்து, 25.01.2025 அன்று தென்னக இரயில்வே அதிகாரிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து இதற்கான தீர்வு எட்டப்பட வேண்டிய வழிவகைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டேன்.
அப்போது, எனது ஒருங்கிணைப்பில் இரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, போக்குவரத்துக் காவல் ஆகிய மூன்று துறை அதிகாரிகள் சேர்ந்து ஒருமித்த உணர்வோடு இந்த சுரங்கப்பாதை அமைப்பதகான பணிகளை தொடங்கினோம்.
அதன்படி, 06.02.2025 அன்று இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களழைத்துக்கொண்டு ஒன்றிய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களை சந்தித்து G-கார்னர் பகுதியில் விரைந்து சுரங்கப்பாதை அமைக்க ஏதுவாக, திட்டம் தயாரிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றையும் விரைந்து முடித்து, கட்டுமானப் பணிகளை தொடங்கிட வழிவகை செய்திடுமாறும் கேட்டுக்கொண்டேன்.
அதன்பிறகு, 22.02.2025 அன்று மதுரை கோட்ட அலுவலகத்தில், தேசிய நெடுஞ்சாலை துறை மண்டல அலுவலர் திரு. கோவிந்தராஜன் அவர்களையும், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் திரு. பிரவீன் குமார் அவர்களையும் சந்தித்து இதுகுறித்து பேசினேன். அப்போது, G கார்னர் பகுதியில் (Vehicle Under Pass - VUP) எனப்படும் வாகனச் சுரங்கப் பாதை அமைக்க தேவையான கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன்.
அதனைத் தொடர்ந்து 27.02.2025 அன்று எனது ஏற்பாட்டில் NHAI மற்றும் இரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து, நில-அளவையாளர் (Surveyor) மூலம் வாகன சுரங்கப்பாதைக்கு தேவைப்படும் இடம் உள்ள நிலங்களை கணக்கிடும் பணிகள் நடைபெற்றது.
கோரிக்கை பெறப்பட்ட நாள் முதல் இன்று வரை அதற்கான எனது தொடர் முயற்சிகள் தொடர்ந்துவந்த நிலையில்,
இன்று (14.07.2025) மாலை 4 மணியளவில் திருச்சி கோட்ட இரயில்வே அலுவலகத்தில் ஒருமுக்கிய சந்திப்பை ஏற்பாடுசெய்திருந்தேன். அதில், திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், விரிவான திட்ட அறிக்கை வழங்கும் நிறுவன உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன். இனிவரும் காலங்களிலும், அடுத்தடுத்த கட்டங்களை எட்டி G-கார்னரில் சுரங்கப்பாதை அமையும் வரை எனது தொடர் முயற்சிகள், அதிகாரிகளின் ஒத்துழைப்போடு முன்னேறிச்செல்லும் என்று உறுதிகூறுகிறேன். என்று திரை வைகோ அவர்கள் கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






