திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்ட விழா – லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பு.திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்ட விழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால்

நினைத்தது நடக்கும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.மேலும் உலக நன்மைக்காகவும்,தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் நோய்,நொடியின்றி வாழவும்,குடும்பம் செழிக்கவும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை பூச்சொரிதல் நடைபெறும் .இந்த விழாக்காலங்களில் மரபு மாறி தன்னைத்தானே வறுத்திக்கொண்டு பக்தர்களுக்காக 28 நாட்கள் அம்மனே பச்சைப் பட்டினி விரதம் இருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு. இந்த நாட்களில் அம்மனுக்கு அரிசி,துள்ளுமாவு ,

இளநீர் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது. இதனால் இக்கோவிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும்,வாகனங்களில் வந்து செல்கின்றனர்.இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 5.04.2026ம் ந்தேதி கொடியேற்றத்துடன் சித்திரை தேர்த் திருவிழா தொடங்கியது.
அன்று காலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள தங்க கொடிரத்திற்க்கும்,
அஸ்திர தேவர்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க மாரியம்மன் படம் தாங்கிய கொடியினை கொடிமரத்தில் ஏற்றினர்.

சித்திரை தேரோட்ட விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வருகிறார்.இரவில் தினமும் அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம் யானை, சேஷா, மரக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று இரவு அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. காலை 10.31 மணிக்குள் மேல் அம்மன் தேரில் எழுந்தருளி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.தேரோட்ட விழாவை காண வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. ச. கண்ணனூர் பேரூராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி செய்து தரப்பட்டது்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. குற்ற சம்பவங்களை தடுக்கவும், தேர் திருவிழாவை காண வந்த பக்தர்களின் பாதுகாப்புக்காகவும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையில் ஒரு ஏ டி எஸ் பி,18 டிஎஸ்பி, 25 காவல் ஆய்வாளர்கள், 60 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டடுள்ளனர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்ட விழா – லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பு



Comments