Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மேம்பாலங்கள், வட்டச்சாலை பணிகள் விரைவுபடுத்தல் – எம்.பி துரை வைகோ ஆய்வு

எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணிகள் தொடர்பாக இன்று (01.07.2026) இரண்டு தனித்தனி ஆய்வுக் கூட்டங்களை அதிகாரிகளுடன் நடத்தினேன்.

முதலாவது கூட்டத்தில், திருச்சி மாநகரின் முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களான மாரிஸ் இரயில்வே மேம்பாலம் (Marris ROB), அரிஸ்டோ இரயில்வே மேம்பாலம் (Aristo ROB), டவுன் ரயில் நிலைய இரயில்வே மேம்பாலம் (Town Station ROB) மற்றும் கோரையாறு ஆற்றுப் பாலம் ஆகிய பணிகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இரயில்வே, மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்று, பணிகளின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்தனர். ஏற்கனவே அளிக்கப்பட்ட உறுதிமொழிப்படி, மாரிஸ் இரயில்வே மேம்பாலப் பணிகள் 2026 செப்டம்பர் மாத இறுதியிலும், அரிஸ்டோ இரயில்வே மேம்பாலப் பணிகள் 2026 டிசம்பர் மாத இறுதியிலும், டவுன் ரயில் நிலைய இரயில்வே மேம்பாலப் பணிகள் 2027 ஆகஸ்ட் மாத இறுதியிலும், கோரையாறு ஆற்றுப் பாலப் பணிகள் 2026 டிசம்பர் மாத இறுதியிலும் நிறைவடையும் என அதிகாரிகள் மீண்டும் உறுதியளித்தனர்.

இந்தப் பணிகளில் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு தேவைப்படும் எந்தச் சூழலிலும் உடனடியாக கூட்டு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, பணிகளில் எந்தவித தாமதமும் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தேன்.இரண்டாவது கூட்டத்தில், பழைய காவேரி பாலத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மேற்கொண்டு வரும் பராமரிப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நகரப் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

பழைய காவேரி பாலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பராமரிப்புப் பணிகளால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக சர்க்கார்பாளையம், வேங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு முன்கூட்டியே உரிய தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பராமரிப்புப் பணிகள் அல்லது போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுவதற்கு முன்பாக, பொதுமக்களுக்கும் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கும் முன்கூட்டியே தெளிவான தகவல் அளித்து தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினேன்.

மேலும், பழைய காவேரி பாலத்தின் பராமரிப்புப் பணிகளை 2026 செப்டம்பர் மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவு செய்வதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் உறுதியளித்தனர்.மேலும், கடந்த 16 ஆண்டுகளாக திருச்சி மாநகரின் மிக முக்கியமான கரும்புள்ளி (Black Spot) பிரச்சினையாக இருந்து வந்த ஜி கார்னர் (G Corner) சந்திப்பிற்கான நிரந்தரத் தீர்வாக, எனது தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக ₹95 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள உயர்மட்ட சுழற்சி மேம்பால (Elevated Rotary) திட்டமும், சஞ்சீவி நகர், ஸ்ரீரங்கம் ஒய் (Y) சந்திப்பு, மாருதி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் ₹150 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள வாகனக் கீழ்ப்பாதைகள் (VUPs) திட்டங்களும் ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், அவற்றின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது டெண்டர் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஒப்பந்ததாரர் விரைவில் இறுதி செய்யப்பட்டு, 2026 செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் தொடங்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்சியில் முழுமையான வட்ட சாலை (Full Ring Road) திட்டம் கடந்த 2010–11 ஆம் ஆண்டிலேயே முன்மொழியப்பட்டது. இதில் தெற்குப் பகுதியான துவாக்குடி–மாத்தூர்–பஞ்சப்பூர் வரையிலான பகுதி மட்டுமே முழுமையாக செயல்படுத்தப்பட்டது. ஆனால் வடக்கு வட்ட சாலைத் திட்டம் (பஞ்சப்பூர் – ஜீயபுரம் – துவாக்குடி) பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் 2021 ஆம் ஆண்டில் இத்திட்டம் மீண்டும் முன்மொழியப்பட்ட போதிலும், பணிகளைத் தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருகிறது.

அந்தந்த காலகட்டங்களில் ஆட்சியில் இருந்த அரசுகள் இந்த முக்கியத் திட்டத்தை முன்னுரிமை அளித்து விரைந்து செயல்படுத்தியிருந்தால், இன்று பழைய காவேரி பாலம் போன்ற முக்கிய சாலைகள் மற்றும் பாலங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் நேரங்களில் நகரின் ஒட்டுமொத்த போக்குவரத்து இவ்வளவு கடுமையாக பாதிக்கப்படாமல், மாற்றுப் பாதைகள் வழியாக சீராக இயக்கப்பட்டிருக்கும்.

எனவே, கடந்த காலத் தாமதங்கள் இனியும் தொடராமல், திருச்சியின் முழுமையான வட்ட சாலைத் திட்டத்தை காலம் கடத்தாமல் உடனடியாக செயல்படுத்துவது மிகவும் அவசியம். இதுவே எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.இந்த முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு வாரமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமிருந்து நேரடியாக முன்னேற்ற அறிக்கைகளை பெற்று வருகிறேன். மேலும், ஒவ்வொரு மாதமும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, பணிகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து, நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் அனைத்து பணிகளும் நிறைவடைவதை உறுதி செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்துவேன்.

திருச்சி மாநகரின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்திற்கும் அவசியமான இந்த முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேறுவதை தொடர்ந்து கண்காணித்து, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.

 

அன்புடன்,

துரை வைகோ

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்,

மறுமலர்ச்சி திமுக.

01.07.2026.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *