திருச்சியில் கவுன்சிலர் தலைமையில் அலம்பல் செய்து பெட்ரோல் பங்க்கை சுற்றி வளைத்து தெறிக்க விட்ட கும்பல்
திருச்சி கே.கே சாலையில் பெரியார் மணியம்மை கல்லூரி அருகே ஐ.ஓ.சி பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கின் உரிமையாளர் சுரேஷ். இவரின் உறவினர் வசந்த் பெட்ரோல் பங்கில் இன்று இருந்த போது திமுக கவுன்சிலர் முத்துசெல்வம் தலைமையில் 40 பேர் கொண்ட கும்பல் வந்து ரகளை செய்து தன்னை தாக்கியதாக புகார் கொடுத்துள்ளார்.
பெட்ரோல் பங்கிற்க்கு வந்த கும்பல் வாடிக்கையாளர்களை வாகன சாவி பிடுங்கியதால் அலறி அடித்து ஓடியுள்ளனர். பெண் ஒருவர் பங்கிற்க்கு வந்த பொழுது அவரிடமும் தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பெட்ரோல் பங்கின் மேலாளர் அறையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் டிவிஆர் எடுத்து சென்றனர். அறையை பொறுமையாக புதிய தாழ் ரெடி செய்து பூட்டி சாவி எடுத்து சென்றுள்ளனர். கண்காணிப்பு கேமராவில் எந்த காட்சிகளும் பதிவாகி சாட்சியாகி விடக்கூடாது என்பதற்காக இதை திருடி சென்றதாக புகாரில் வசந்த் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரது காரை திருடி சென்ற கும்பல் காவல்துறையில் புகார் கொடுத்தவுடன், மீண்டும் கார் பெட்ரோல் பங்கிற்கு வந்தது. அதன் உள்ளே ஏராளமான காலி மதுபான பாட்டில்கள் இருந்தது.பெட்ரோல் பங்கின் அனைத்து பகுதிகளிலும் காலி மதுபான பாட்டில்கள், வாட்டர் பாட்டில்கள், கப் போன்றவைகள் சிதறி கிடந்தன. ஒரு கட்டத்தில் அந்த கும்பல் பெட்ரோல் பம்பை எடுத்து லைட்டரால் தீ வைத்துக் கொளுத்தி விடுவேன் என மிரட்டி உள்ளனர். இந்த சம்பவங்களை பார்த்து அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் ஏராளமான பதட்டத்துடன் வாகனத்தை ஓட்டி சென்றனர்.
சம்பவ இடத்திற்கு ரோந்து வாகன காவல்துறையினர் வந்த பொழுது பெரும் கூட்டமே அங்கு இருந்தது. அதன் பிறகு அட்டகாசம் செய்த ரவுடி கும்பல் தெறித்து ஓடினர். தற்பொழுது வரை பெட்ரோல் பங்க் மூடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இன்னமும் பெட்ரோல் பங்க் மூடிய கதவு திறக்கப்பட முடியாமல் உள்ளது. இச்சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.