துவைத்துப் பயன்படுத்தும் துணி டயப்பர் தயாரிப்பில் அசத்தும் திருச்சி பெண்

துவைத்துப் பயன்படுத்தும் துணி டயப்பர் தயாரிப்பில் அசத்தும் திருச்சி பெண்

குழந்தைகளுக்கு டயபர்களைப் பயன்படுத்தலாமா, வேண்டாமா அவற்றால், குழந்தைகளின் தோலுக்கு எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படுகிறது என்பது போன்ற அடிப்படைச் சந்தேகங்களுக்குப் பதில் கிடைக்காமலேதான் வேறு வழியில்லாமல் பெற்றோர் டயபர்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். 

டயபர்கள் சார்ந்த பெற்றோரின் இந்தப் பயத்தைப் போக்கும்விதமாகச் சூழலுக்குப் பாதிப்பில்லாத துணி டயபர்கள் தற்போது பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய துணியால் ஆன, துவைத்துப் பயன்படுத்தக்கூடிய 'டயப்பர்'களை உற்பத்தி செய்து வருகிறார். திருச்சியை சேர்ந்த இளம் பெண் தொழில்முனைவோர் ஆம்ரின்.

மென் பொறியாளராக பணியாற்றி வந்த ஆம்ரின் தன்னுடைய தொழில் முனைவோர் ஆக வேண்டும்என்ற ஆசையால் ஆன்லைனில் தொழில் தொடங்கவேண்டும் என்று எண்ணினார். துணி டயபர்களைப் பற்றி அறிந்து கொண்ட பின் நாமே அவற்றைத் தயாரிக்கலாமே என்ற ஆர்வம் மேலிட, ஒன்றரை ஆண்டுகள் விரிவான ஆய்வு செய்து, துணி டயபர்களைத் தயாரித்து விற்பனை செய்வதற்காக ‘Ambaby’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

2019 முதல் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் சொந்தமாக ஒரு யூனிட்டைத் தொடங்கி துணி டயபர்களைத் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து ஆம்ரின் நம்மிடம் பேசுகையில்.... குழந்தைகளுக்கான பொருட்களைத் தயாரித்து, விற்பதில் இருக்கும் சிக்கல் களையும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியதையும் சொல்லிப் பலரும் என்னைப் பயமுறுத்தினர். ஆனால், குழந்தைகளுக்கும் சூழலுக்கும் பாதுகாப்பான இந்தத் துணி டயபர்களைத் தயாரிப்பது என் மனத்துக்குப் பிடித்திருந்தது. என் குழந்தையையும் மனத்தில் வைத்தும் இந்தப் பொருட்களைத் தயாரிப்பதால் இயல்பாகவே கூடுதல் பொறுப்புணர்வோடும் அக்கறையுடனும் செயல்படுகிறேன். 

துணி டயபர்களைப் பற்றிய விழிப்புணர்வும் பெற்றோர்களிடம் இப்போது அதிகரித்திருப்பது குழந்தைகளுக்கும் சூழலுக்கும் நல்ல விஷயம்” பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியப்படும் ‘டிஸ்போஸபிள்’ டயபர்களால் குழந்தைகளின் தோல் பாதிப்படைவது ஒரு பிரச்சினை என்றால், அவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றொரு பெரிய பிரச்சினை. இதற்கு மாற்றாகத்தான் துணி டயபர்கள் வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் இங்கேயும் பிரபலமாகி வருகின்றன. சாதாரண டயபர்களில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் துணி டயபர்களிலும் கிடைக்கும் படிதான் அவை வடிவமைக்கப்படுகின்றன.

முதலில் சில பெற்றொர்களிடம் சாம்பிள் கொடுத்தோம். அதைக் குழந்தைகளுக்குப் பயன்படுத்தியவர்கள், அதன் பயன்பாடு நன்றாகவே இருப்பதாகத் தெரிவிக்க உற்பத்தியை அதிகரித்தோம். துவைத்துச் சுத்தமாகப் பராமரித்துப் பயன்படுத்தத்தக்க இந்த டயப்பரை மூன்று ஆண்டுகள் வரை  பயன்படுத்தலாம். அதன் பின்னர் தூக்கி எறிந்தாலும் மண்ணில் எளிதாக மக்கிவிடும். மண்ணுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கிறார் ஆம்ரின்.

குழந்தையென்றால் நாளொன்றுக்கு 10 முதல் 15 டயபர்கள் வரை மாற்றுகிறோம். ஒரு சாதாரண டயபரின் விலை ரூ. 10 என்று வைத்தால்கூட, ஓர் ஆண்டுக்கு நாம் டயபர்களுக்கு என்று சுமார் 30,000 ரூபாயைச் செலவழிக்கிறோம். அந்த வகையில் பார்த்தால், துணி டயபர்களின் விலை அதிகம் என்று சொல்ல முடியாது” என்று விளக்குகிறார் அவர்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் இவ்வகைப் பொருட்கள் எளிதில் மக்குவது இல்லை. நெகிழிகளைப் போல் நீண்ட நாட்களுக்கு மண்ணிலேயே கிடக்கும். குப்பையிலும், கால்வாயிலும் நிரம்பி வழியும் கழிவுகளில் டயப்பர்களும் அதிகம். இதனால் மண் மட்டுமின்றி, சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.

இதற்கு ஒரே மாற்று மீண்டும் துணிகளைப் பயன்படுத்துவதுதான் என்றாலும் நீண்ட நேரம் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில், துணி டயப்பர்களை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

“துணி டயாப்பரை பயன்படுத்தும் போது குழந்தைகளின் சருமத்திற்கு எந்தவித பிரச்சனையும் வராத அளவிற்கு வடிவமைத்துள்ளேன். இதில் பணச் செலவு குறைவு, கெமிக்கல்கள் இல்லை. திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். குழந்தைக்கு சௌகரியமா க இருக்கும்,” எனத்தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision