2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை அசத்தும் உணவகங்கள்!
காரைக்குடி அருகே உள்ள கோனாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. உறையூர் மேட்டுத்தெருவில் கடந்த 3 ஆண்டுகளாக, இரவு நேர உணவகம் நடத்தி வருகிறார்.குடும்பமே உணவகத்தில் பணியாற்றுகின்றனர். இவர், 2 ரூபாய்க்கு சுவையான தேங்காய் மற்றும் கார சட்னி, குருமா போன்ற 5 வகைகளுடன் தோசை உணவளிக்கிறார்.
Advertisement
சின்னத் தம்பிக்கு எப்படி இந்த எண்ணம் வந்ததது என்று கேட்ட போது
முதலில் 5 ஆண்டுகள் தனியார் கல்லூரியிலும், ஓட்டல்களில் வேலை பார்த்த இவருக்கு, அய்யப்பன் கோவில் விசேஷத்தின் போது, சமையலுக்கு ஆர்டர் கிடைத்தது. அப்போது, சிறிய அளவிலான தோசைகளை தயார் செய்து கொடுத்துள்ளார். அதை பார்த்தவர்கள், அவர்கள் வீட்டு விசேஷத்துக்கும் இதே போல், சிறிய தோசைகள் தயார் செய்து தருமாறு கேட்டனர். மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததால், நான் நடத்தி வரும் ஓட்டலிலும் சிறிய அளவிலான தோசைகளை தயார் செய்து வாடிக்கையாளர்களை கொடுத்து திருப்திபடுத்தி வருகிறேன். 5 தோசை வைத்து ஒரு பிளேட் 10 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.
குழந்தைகள் விரும்பும் வகையில், கேரட், வெங்காயம், இட்லி பொடி போன்றவற்றை சேர்த்து, 5 தோசைகள் கொண்ட பிளேட் 15 ரூபாய்க்கு தயார் செய்து கொடுக்கிறேன்.
என்னுடன் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் சேர்ந்து, இந்த ஓட்டலை நடத்துவதால், ஓரளவுக்கு கட்டுபடியாகிறது என சின்னத்தம்பி தெரிவித்தார்.
சாப்பிட்டுக்கொண்டிருந்த வாடிக்கையாளர் கார்த்திகேயனிடம் பேசும்போது... திருச்சியிலேயே இருந்தாலும், 2 ரூபாய் தோசைக் கடை இருப்பதை, யுடியூப் சேனல் மூலம் தெரிந்து கொண்டோம். இங்கு வந்து சாப்பிட்டு பார்த்து விட்டு, ரெகுலாக சாப்பிடத் துவங்கி விட்டோம். சாதாரண ஓட்டல்களில் பெரிய தோசையாக கொடுப்பதால், சாப்பிட முடியாமல் வீணாகலாம். ஆனால், சிறிய தோசைகளாக இருப்பதால் தேவையானவற்றை வாங்கி, சூடாகவும், சுவையாகவும் திருப்தியாக சாப்பிட முடிகிறது என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.
இதனைத் தொடர்ந்து இன்னொரு இளைஞர் திருச்சியில் 5 ரூபாய்க்கு கலவை சாதம் மாணவர்களுக்கு பாதி விலை அம்மா உணவகத்திற்கு இணையாக அசத்தி வருகிறார்.
திருச்சி முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான சாம்நாத். இவர் டிப்ளமோ படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு திருச்சியில் காஜாமலை பகுதியில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் 5 ரூபாய்க்கு கலவை சாதம் விற்பனை செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதுகுறித்து சாலையோர உணவகம் நடத்தி வரும் சாம்நாத் கூறுகையில்.. தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில், சிவில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்த போது, குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியவில்லை. படிப்பை பாதியில் விட்டு விட்டு, தந்தையுடன் வெல்டிங் வேலைக்குச் சென்றேன். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தொழிற்சாலைகளுக்கும் மூடப்பட்டதால், அங்கும் வேலை இல்லாமல் போய்விட்டது. குடும்ப வருமானத்துக்காக, வேறு தொழில் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால், நானும், என் குடும்பத்தினரும், சாலையோர உணவகம் தொடங்க முடிவெடுத்தோம். அண்ணா ஸ்டேடியம் பகுதியில் 5 மாதங்களுக்கு முன், கடை வைத்தோம். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சம்பார், தக்காளி, லெமன் சாத வகைகள் தயார் செய்து, 5 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். மாணவர்கள் மட்டுமின்றி பலரும் இங்கு வந்து சாப்பிடுகின்றனர். கஷ்டத்தில் உள்ள மாணவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றியதால், சலுகை அடிப்படையில், பாதி விலையில் உணவு வழங்கப்படுகிறது. வீட்டிலேயே நானும், என் குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து செய்வதாலும், விறகு அடுப்பில் சமைப்பதாலும், சுவையாகவும், குறைந்த விலையிலும் கொடுக்க முடிகிறது. கலவை சாதம் சமைத்து, காலை 11 மணிக்கு வியாபாரத்தை துவங்கினால், மாலை 3 மணி வரை வியாபாரமாகும். குறைந்த விலைக்கு விற்றாலும், அதிக அளவில் விற்பனையாவதால், சமாளிக்க முடிகிறது. அதே சமயம், தரத்தை விட்டுக் கொடுப்பதில்லை, என்றார். மேலும், நூற்றுக்கணக்கான கடைகளில் ஒன்றாக இல்லாமல், தனித்து இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
Advertisement
இதை மற்றவர்கள் வியாபார உத்தியாக கருதினாலும், கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும், என்பதே என் நோக்கம். இவ்வாறு, அவர் தெரிவித்தார். இந்த கடையில் சாப்பிடும் வாடிக்கையாளர்கள் கூறிய போதுஅதிகபட்சம் 20 ரூபாய் செலவு செய்தாலே, போதுமான அளவுக்கு சாப்பிட முடிகிறது. விலை குறைவாகவும், தரமாகவும் உள்ளது. கலவை சாதம் மட்டுமின்றி வடை, முட்டை போன்றவையும் விற்பனை செய்கின்றனர். சீப் அண்ட் பெஸ்ட்டாக இருப்பதால், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், என்றனர்.