என் வாழ்வை வண்ணமயமாக்கும் வண்ணங்கள்- ஜெயவர்த்தினி

என் வாழ்வை வண்ணமயமாக்கும் வண்ணங்கள்- ஜெயவர்த்தினி

ஆசிரியர் பணி கற்றுக் கொடுப்பது மட்டுமல்ல கற்றுக் கொள்வதும் தான் என்று ஆசிரியர், ஓவியர், கவிஞர், பறை இசை கலைஞர், ஹாக்கி வீரர் என்ற பன்முக திறமையோடு பணிபுரிந்து கொண்டே தன்னுடைய தனி திறமைகளையும் வளர்த்து பிறருக்கும் கற்பித்து வருகிறார் திருச்சியை சேர்ந்த ஜெயவர்த்தினி

உங்கள் ஆசிரியர் பணி குறித்து 

அம்மா ஓவிய ஆசிரியர் அம்மா மட்டுமின்றி குடும்பத்தில் பலரும் ஆசிரியராக பணி புரிந்தவர்கள் அவர்களை பார்த்து ஆசிரியராக பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.கணினி துறையில் (எம். எஸ்.சி., பி.எட்., எம்.பில்.,) பயின்றுவிட்டு ஒரு பள்ளியில் ஐந்து ஆண்டுகளாக கணினி துறை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன் அதுமட்டுமின்றி பள்ளியில் மாணவர்களுக்கு எனக்கு பிடித்த ஓவியத்தையும் பறை இசை பயிற்சியும் அளித்து வருகிறேன். நம் கற்றுக் கொண்டதை விட கற்றுக்கொள்ள குழந்தைகளிடம் ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது என்பதை உணர்த்துவதே இந்த ஆசிரியர் பணி என்று அனுபவம் மூலமாக கற்று வருகிறேன்.

உங்கள் பன்முக திறமையை பற்றி கூறுங்கள் 

அம்மா ஓவிய ஆசிரியர் அதுமட்டுமின்றி என் அப்பாவும் ஓவியம் வரைவார். அவர்களிடமிருந்து எனக்கு ஓவியத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தது. இயற்கை மற்றும் பலவித ஓவியங்களுக்கு மத்தியில் மனித முகங்கள் வரைவதில் அதிக ஆர்வம் எழுந்தது ஒருவரது உணர்வுகளை ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்துவது எனக்கு அதிக மகிழ்ச்சி கொடுத்தது. சற்று சிரமமானாலும் அதன் மீதான ஆர்வம் என்னை தொடர்ந்து கற்றுக் கொள்ள உதவியது. வரைந்த ஓவியங்களை சமூக வலைதளங்களில் பதிவிடும் பொழுது பல கலைஞர்கள் எனக்கு கற்றுக் கொள்வதற்கு உதவியாகவும் இருந்தனர். தொடர்ந்து இதனை ஒரு தொழிலாகவும் செய்து வருகிறேன். கொரோனா காலகட்டம் தான் என்னுள் இருக்கும் அதிக திறமைகளை வெளிப்படுத்திய காலம் என்று கூறலாம்.

தனிமைகளை இந்த வண்ணங்கள் மூலம் போக்கிக் கொண்டேன் என்று கூட சொல்லலாம்.இன்றைக்கு பல தொழில்நுட்பம் வந்தாலும் கைகளில் வரையும் ஓவியங்களுக்கு இருக்கும் மதிப்பும் குறையவே இல்லை. அதனை செய்து முடிப்பதில் எனக்கும் ஒரு மகிழ்ச்சி பிடித்தவற்றையும் செய்யும்பொழுது சோர்வு தெரிவதில்லை சில நேரங்களில் பள்ளியை விட்டு வந்துவிட்டு இரவு 3 மணி வரை தொடர்ந்து ஓவியம் வரைந்து இருக்கிறேன் இந்த வண்ணங்கள் அந்த இரவை அழகாகின்றன.எனக்கான முதல் அடையாளமாக அமைந்ததும் இந்த ஓவியர் என்ற பெயர்தான்.போட்டிக்கு செல்லும் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது, குழந்தைகள் இல்லங்களில்கோடை காலங்களில் சிறப்பு வகுப்புகள் சமூக விழிப்புணர்வுக்காகவும் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு இலவசமாக செய்து வருகிறேன்.

கவிஞராக உங்கள் பயணம் 

என்னைப் பொறுத்தவரை உணர்வுகளை ஓவியங்களுக்கு அடுத்த வகையில் உணர்த்த முடியும் என்றால் அது எழுத்துக்கள் மூலமாகத்தான் கவிதையும் அவ்வாறானது. நாம் அடையும் உணர்வுகளை வாசிப்பவர்களுக்கும் அளிக்கும் என்றால் அது ஒரு சிறந்த கவிதையே கவிதையின் மீதான ஆர்வம் பல தமிழ் கவிஞர்களின் கவிதைகளை படித்தபோது தொடங்கியது. தமிழ் ஆளுமை என்னுள் அதிகம் இருந்ததால் தொடர்ந்து கவிதை எழுதினேன் கவிதை எழுதியதை தொடர்ந்து ஆதர்ஷினி கார்க்கி என்ற பெயரில் அவனதிகாரம் என்ற புத்தகத்தையும் வெளியிட்டேன். இந்த புத்தக வெளியீடு கூட ஒரு குழந்தைகள் இல்லத்தில் நடைபெற வேண்டும் என்று எண்ணி திருச்சியில் உள்ள ஒரு குழந்தைகள் இல்லத்தில் புத்தக வெளியீட்டு விழாவையும் நடத்தினேன்.

அப்பாவின் மரணம் எனக்கு பறை இசையை அறிமுகப்படுத்தியது. சத்தம் என்றாலே பிடிக்காத எனக்கு பறை இசை ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கியது பறை கற்றுக்கொண்டு இன்று பல நிகழ்ச்சிகளையும் பறை இசைத்து வருகின்றோம். கற்றுக்கொள்வதற்கு வயது ஒரு தடை இல்லை. எல்லா இசைக்கருவிகளும் ஒன்றை இந்த இசை கருவிகளை வைத்து சமூகம் சார்ந்த சிக்கல்களை உண்டாக்குவது தவறு என்பதை என்னுடைய அடுத்த தலைமுறைக்கு உணர்த்துவதற்கு என்னுடைய ஆசிரியர் பணியும் உதவுகிறது. 2022-2023 அரசு நடத்திய கலைத் திருவிழா போட்டிகளில் ஓவியப் பிரிவின் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு நடுவராக பங்கு பெற்றார்.

அதைத் தொடர்ந்து 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு அரசு நடத்திய மாநில அளவிலான கலை திருவிழா போட்டிகளில் நடுவராக பங்கு பெற்றிருக்கிறார். மேலும் கணினி ஆசிரியராக தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கணினி பாடப்பிரிவுகளில் 11, 12 ஆம் வகுப்பு மாணவிகளை 100/100 மதிப்பெண்கள் எடுக்க பயிற்சியளித்து ஊக்கப்படுத்தியதற்காக கண்மலை அறக்கட்டளை மற்றும் இவர் பயின்ற திருச்சி ஜமால் முகமது கல்லூரி " சிறந்த ஆசிரியர் விருது" அளித்து பாரட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும் மலைக்கோட்டை எழுத்தாளர்கள் என்னும் புத்தகத்தில் இவர் பற்றிய விவரங்களும் இவரது பன்முகத் தன்மை குறித்தும் அச்சிடப்பட்டு பிரசுரம் ஆகி இருக்கிறது 

பெற்ற விருதுகளும் பரிசுகளும்:

கலை வளர்மணி விருது (கலை பண்பாட்டு துறை ,தமிழ்நாடு அரசு)

சிறந்த ஆசிரியர் விருது

கலைச்செம்மணி விருது

தூரிகை சுடர்மணி விருது 

கலாரத்தின தேசிய அளவிலான விருது

எழுச்சி கவிஞர் விருது

Moral கலை ரத்தின விருது 

ஏகலைவன் விருது

சிங்க பெண்ணே விருது 

உலக சாதனையாளர் விருது 

சிறப்பு விருது -கேலிச்சித்திரம் (நுண்கலைத் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்)

கேலிச்சித்திரம் சிறப்பு விருது - தூய வளனார் கல்லூரி.

நம் வாழ்வில் வெற்றி பெறுவதும் நமக்கு பிடித்தவற்றை செய்து கொண்டே சாதிப்பதும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் சார்ந்தது நேர்மறை சிந்தனை கொண்ட மனிதர்களோடு பழகுதல் வாழ்வில் வெற்றிக்கு மிக எளிய வழி என்றே கூறலாம். எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் இருப்பது நம் திட்டங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதுமே நம்மை வெற்றியடைய செய்து விடும்.நமக்கு ஆர்வம் இருக்கும்செயல்களில் அதிக கவனத்தோடு செயல்பட்டாலே நாம் பிடித்தவற்றை நமக்கு அடையாளமாக மாற்றி கொடுக்கும் என்று என் மாணவர்களுக்கும் சொல்லி  வருகிறேன் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision