திருச்சியில் மழை நீர் சூழ்ந்த குடியிருப்பு வாசிகளுக்கு சொந்த செலவில் பால் பாக்கெட், பிஸ்கட் வழங்கி வரும்  உறையூர் காவல் உதவி ஆய்வாளர்

திருச்சியில் மழை நீர் சூழ்ந்த குடியிருப்பு வாசிகளுக்கு சொந்த செலவில் பால் பாக்கெட், பிஸ்கட் வழங்கி வரும்  உறையூர் காவல் உதவி ஆய்வாளர்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து திருச்சியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்த மழையின் காரணமாக திருச்சி மாநகரில் உள்ள தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து மழை நீர் வடிவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரில் சிக்கி தவிக்கும் பொதுமக்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆறுகண் தடுப்பணையில் அதிக அளவு மழை நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால் உறையூர் பகுதி முற்றிலும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி உள்ள வீட்டிற்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதற்கிடையில் மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தனது சொந்த செலவில் மக்களுக்கு தேவையான பால் பாக்கெட், பிஸ்கட் உணவுப் பொட்டலம், குடிநீர் ஆகியவற்றை வழங்கி வருகிறார் உறையூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மோகன்.

இதில் உறையூரில் உள்ள ராஜலட்சுமி நகர், சீதா லட்சுமி நகர், குழுமணி ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு நாள்தோறும் தனது சொந்த செலவில் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார். இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவருடைய செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision