வலு தூக்கும் போட்டியில் சாதனை படைக்கும் திருச்சி இளைஞர்
இது கணிப்பொறி காலம் என்பதால் ஐ.டி நிறுவனங்களில் வேலை செய்ய இளைஞர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். அரசுப் பணி செய்வதையும் விரும்புகிறார்கள். ஆனால், இதற்கு மத்தியில் இளைஞர்களின் கவனம் விளையாட்டுக்குத் திரும்புவதையும் காண முடிகிறது.
அரசு வேலையில் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கீடு உள்ளதால், வலுதூக்கும் பயிற்சியில் பங்கேற்று ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்கும் இளைஞர்கள் அதிகரித்து வருகின்றனர். அதேபோல், தேசிய அளவிலான போட்டிகளிலும் சிறப்பு இடங்களையும் பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் சிறுவயதிலிருந்தே வலுதூக்கும் போட்டியில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்து கடந்த ஏழு ஆண்டுகளாக உலக அளவிலும் பல சாதனைகளை செய்து தன்னுடைய சாதனைகளையும் தானே முறியடித்து வருகிறார் திருச்சியில் சேர்ந்த 17 வயதான தினேஷ்.
கடந்த ஆண்டு நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் திருச்சி சுப்பிரமணியபுரம் கோனார் தெருவில் வசிக்கும் ஆர்.தினேஷ் கலந்து கொண்டார். இதில் சப்-ஜூனியர் 66 கிலோ எடை பிரிவில் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
டெட் லிப்ட் 218 கிலோ எடையைத் தூக்கி தங்கப்பதக்கம் வென்றதுடன் முந்தைய சாதனையான 217.5 கிலோ என்ற சாதனை முறியடித்து காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும், இவர் ஸ்குவாட்டில் 200 கிலோ எடையை தூக்கி தங்கமும், பென்ச் பிரஸ்சில் 120 கிலோ எடையை தூக்கி தங்கமும், மொத்தம் 538 கிலோ எடையை தூக்கியதற்காக தங்கம் என்று 4 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
இப்போட்டியின் இரண்டாவது அதிகபட்ச எடை தூக்கியவர் என்பதை பாராட்டி இவருக்கு “ஸ்டிராங்மேன்-2” என்ற விருது வழங்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி ருமேனியாவில் நடைபெற்றது உலக அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில்
Squat-ல் வெள்ளிப்பதக்கம்.
2. Bench press-ல் வெண்கல பதக்கம்.
3. Deadlift-ல் தங்க பதக்கம்
ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் வெள்ளிப் பதக்கம் என தினேஷ் 4 பதக்கங்களை வென்று திருச்சிக்கு பெருமை சேர்த்துள்ளர்.
11 வயது முதல் தொடர்ந்து முயற்சித்து வரும் தினேஷ் கடந்த ஏழு ஆண்டுகளில் 6 தேசிய அளவிலான பதக்கங்களும், 13 மாவட்ட அளவில் ஆன பதக்கங்களையும், 3 சர்வதேச போட்டிகளிலும் வென்று தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று பல பதக்கங்களைஅள்ளி தன்னுடைய சாதனை பட்டியலையும் தொடர்ந்து வருகிறார்.
இவ்வருடம் மே மாதம் நடைபெற்ற ஏசியன் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்று 4 தங்கம் மற்றும் 'ஏசியா 2023 பெஸ்ட் லிப்டர் விருது ' பெற்றார்.
வலுதூக்கும் போட்டியில் மட்டுமில்லாமல் ரைபிள் சூட் போட்டிகளிலும் தனக்கென தனி அங்கிகாரத்தையும் தனி அடையாளத்தையும் உருவாக்கி வருகிறார் தினேஷ்.ரைப்பிள் ஷூட்டில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று முயற்சித்ததோடு உலக கோப்பை போட்டியில் இறுதிக்கட்டம் வரை சென்றுள்ளார்.
சாதனைகள் குறித்து தினேஷிடம் பேசியபோது அவர் கூறியதாவது,
சிறுவயதிலிருந்தே எனக்கு வலுதூக்குதல் போட்டியின் மீது அதிக ஆர்வம் இருந்தது என் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் என்னுடைய பயிற்சியாளர்களின் ஊக்கமும் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது
தொடர்ந்து செய்த முயற்சி இத்தனை விருதுகள் பெறுவதற்கு உறுதுணையாக அமைந்தது. தொடர்ந்து இந்தியாவிற்காக பல சாதனைகளையும் பல பதக்கங்களையும் வென்று உலக அளவில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே என் வாழ்வில் லட்சியம் என்றார்.
சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் சாதனை படைக்க துடிக்கும் இந்த இளைஞன் திருச்சியின் தனி அடையாளம் தான்!!
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision