திருச்சியில் குரலற்றவர்களின் குரலாக வாழ்ந்த சமுக ஆர்வலர் சேகரன் கொரோனாவால் உயிரிந்தார்
மண் சார்ந்த மக்கள் சார்ந்த நலனுக்காக வாழ்நாள் முழுவதும் ஒருவரால் உழைக்க முடியும் எனில் அவர்கள் அந்த மண்ணின் மாமனிதர்கள் என்றுதான் கூற வேண்டும்.
தன் வாழ்நாளில் மக்களின் நலனுக்காகவே அவர்களுடைய வாழ்வியல் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் திருச்சியை சேர்ந்த சேகரன். திருச்சி மாவட்டம் நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் தலைவராகவும் சமுக ஆர்வலராகவும் இருந்த திரு. சேகரன் எம். சுந்தரம், மக்களின் குரலாக மக்களின் பிரச்சனைகளை அரசிடம் கொண்டு சேர்த்த ஒரு மாபெரும் நல்லுள்ளம் கொண்டவர்.
திருச்சியின் வளர்ச்சியில் இவருடைய பங்கு அளப்பரியது. இவரோடு பழகியவர்கள் இவர் பற்றி கூறுகையில்,
"முகத்தில் எந்நேரமும் புன்னகையோடு இருப்பார். யார் எப்போது உதவி கேட்டாலும் தயங்காமல் செய்து கொடுப்பார். எய்ம்ஸ் மருத்துவமனையை திருச்சியில் அமைக்க வேண்டும் என்று டெல்லி வரை சென்று போராடியவர். எந்த நேரத்தில் அழைத்தாலும் சிறிதும் சோர்ந்து போகாமல் உற்சாகத்துடன் பேசுவார். இத்தனை வயதிலும் இவ்வளவு உற்சாகத்தோடும் புத்துணர்வோடும் செயல்பட இத்தனை ஆற்றல் அவருக்கு எங்கிருந்து வருகிறது என்று பார்க்கும் அனைவரும் வியப்படைவார்கள்" என்கிறார்கள்.
பதவிக்கு அப்பாற்பட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதை என் வாழ்வின் லச்சியம் என்று எப்போதும் கூறிக் கொண்டிருப்பவர் சேகரன் ஐயா. கோபம் என்பது சமூக அக்கறையின் மீது தான் இருக்க வேண்டுமே தவிர சமூகத்தில் இருக்கும் மக்கள்மீது இருக்கக்கூடாது என்ற கொள்கையோடு இருந்தவர்.
ஒரு பிரச்சினையை அவரிடம் சொல்லி விட்டால் அந்த பிரச்சனையை எடுத்து அரசு அதிகாரிகளிடம் தெரிவிப்பதை தாண்டி அதற்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராடிக் கொண்டிருப்பார்.
மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக சென்று மக்களின் பிரச்சனையை எடுத்துரைக்கும் திரு.சேகரன்
இயற்கை பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு மக்களின் அத்தியாவசிய தேவை,அடிப்படை உரிமைகள், திருச்சியில் வளங்கள் காத்தல், திருச்சியின் வரலாற்றுப் பின்னணியை மீட்டெடுத்தல் இப்படி எல்லா வகையிலும் திருச்சி மக்களின் பிரதிநிதியாகவே வாழ்ந்தவர்.
திருச்சி மக்களுக்காகவும் திருச்சியின் வளர்ச்சிக்காகவும் தனது வாழ்நாளில் பெரும்பங்கினை அர்ப்பணித்த சேகரன் இன்று கொரோனா நோய்தொற்றால் உயிரிழந்தார்.
வரும் காலங்களில் மிக சிறந்த மாவட்டங்களில் திருச்சி இடம்பெறும் எனில் இவரின் புகழும் பங்களிப்பும் எப்போதும் திருச்சி மக்களின் நினைவில் வந்துசெல்லும். திரு. சேகரன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய திருச்சி விஷன் குழு வேண்டுகிறது.