தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதிக்குள் நுழைந்த கஞ்சா போதை கும்பல் மாணவர்களை தாக்கி அட்டூழியம்

தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதிக்குள் நுழைந்த கஞ்சா போதை கும்பல் மாணவர்களை தாக்கி அட்டூழியம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதிக்குள் புகுந்த 9 பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல் மாணவர்களை தாக்கி வழிப்பறி செய்து அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இயங்கி வரும் ஸ்ரீ ஆதிசங்கரா பாலிடெக்னிக் கல்லூரியின் விடுதியில் 50-க்கும் மேற்பட்ட  மாணவர்கள் தங்கி பட்டய படிப்பு படித்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று இரவு மூன்று இருசக்கர வாகனங்களில் கருப்பு நிற மாஸ்க் அணிந்து கஞ்சா போதையில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் திடீரென  மாணவர்கள் தங்கி  இருக்கும் இரண்டு அறைகளின் கதவை அடித்து உடைத்துள்ளனர்.

அப்போது அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பயத்தில் கூச்சலிடவே உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மாணவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளனர்.இந்த சம்பவத்தை பார்த்த அருகில் தங்கியிருந்த மற்ற மாணவர்கள் தங்களது அறையை உள்பக்கம் தாழிட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்ந்து மாணவர்களை மண்டியிட வைத்த மர்ம நபர்கள் அவர்களின் உடைமைகள் வைத்திருந்த பெட்டிகளை ஆய்வு செய்து அதில் இருந்த தங்க செயின், வெள்ளி செயின் மற்றும் பணத்தை கைப்பற்றியுள்ளனர்.பின்னர் மாணவர்களிடம் இருந்து 13 செல்போன்களை பறித்துக்கொண்ட அந்த கஞ்சா போதை கும்பல் அறையில் தங்கியிருந்த 12 மாணவர்களை சுமார் ஒரு மணி நேரமாக தனித்தனியாக அழைத்து அடித்து உதைத்து கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் மாணவர்களின் வைத்திருந்த உடைகள், காலணிகள் உள்ளிட்டவைகளையும் எடுத்துக்கொண்டு அந்த கஞ்சா போதை மர்ம நபர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வினோத், சந்தோஷ் ஆகிய இரண்டு மாணவர்களை சக மாணவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.

அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் புகுந்து மாணவர்களை தாக்கிய கஞ்சா போதை கும்பலை தேடி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision