புரோட்டா மாஸ்டரை கொலை செய்ய முயற்சி செய்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திருச்சி மாநகர காவல் ஆணையர் N.காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கொலை முயற்சியில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன்படி, கடந்த (16.08.23)-ந் தேதி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரைக்கடை பஜார் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வரும் ஒருவர் வாங்கிய கடன் மற்றும் வட்டி கொடுக்காததால் அவரது வீடு புகுந்து ஆபாசமாக திட்டியும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் தாராநல்லூர் பகுதியை சேர்ந்த ரவுடி மதன் (எ) மொட்ட மதன் (எ) மதன்குமார் என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ரவுடி மதன் (எ) மொட்ட மதன் (எ) மதன்குமார் என்பவர் மீது எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இரண்டு வழக்குகளும், காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் 8 வழக்குகளும், உறையூர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், பாலக்கரை காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உட்பட 24 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
எனவே, எதிரி மதன் (எ) மொட்ட மதன் (எ) மதன்குமார் தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரியின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் N.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு அவர் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision