இசைத்துறையில் சேர்ந்து படிக்க அரியதோர் வாய்ப்பு - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

இசைத்துறையில் சேர்ந்து படிக்க அரியதோர் வாய்ப்பு - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் (2023 - 2024)ஆம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

இப்பள்ளியில் சேர்க்கை பெறுவதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய துறைகளில் பயிலுவதற்கு 7-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாதசுரம், தவில் ஆகிய துறைகளில் பயில எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானதாகும்.

 

இசைப்பள்ளி சான்றிதழ் படிப்பின் கால அளவு 3 ஆண்டுகள் ஆகும். இதில் பயில ஆர்வமுள்ள மாணவர்கள் ஆண்டுக் கட்டணமாக ரூ.350/- செலுத்திட வேண்டும். இங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் தோறும் ரூ.400/- கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

மேலும் வெளியூர் மாணவர்கள் அரசு விடுதியில் இலவசமாக தங்கி பயிலவும், பேருந்துகளில் பயணம் செய்ய இலவச பேருந்து கட்டண வசதியும் செய்து தரப்படும். மூன்று ஆண்டுகள் படித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக்கச்சேரிகள் நடத்தவும்,

நாதசுரம், தவில் கலைஞராக வாசித்து தொழில் புரியவும், தேவாரம் ஓதுவாராக கோயில்களில் பணிபுரியவும், வானொலி தொலைக்காட்சிகளில் நடத்தப்பெறும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும் கோயில்களில் தேவாரம் ஓதுவார் பணியில் சேர்ந்திட அரசு இசைப்பள்ளியில் தேவாரம் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் இசை ஆசிரியர் பணிக்கு வளாக நேர்காணல் மூலம், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே கலை ஆர்வம் மிக்க மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தலைமை ஆசிரியர் மாவட்ட அரசு இசைப்பள்ளி, எண் : 32, மூலத்தோப்பு, மேலூர் ரோடு, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி - 620006 என்ற முகவரியிலும் மற்றும் (0431-2962942) என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn