திமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட நான்கு பேர் கைது

திமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட நான்கு பேர் கைது

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பிரபாகரன் (36). இவரது கட்டுப்பாட்டில் துறையூர் நரசிங்கபுரம் உள்ளிட்ட 16 வருவாய் கிராமங்கள் செயல்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் நரசிங்கபுரம் கிராமத்தில் செம்மண் கடத்தப்படுவதாக துறையூர் தாசில்தார் வனஜாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே அவர் இது பற்றி வருவாய் ஆய்வாளர் பிரபாகரனுக்கு தகவல் கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வருவாய் ஆய்வாளர் விரைந்து சென்றார். அப்போது பச்சை மலை அடிவாரத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சிலர் பொக்லைன் எந்திரத்தைக் கொண்டு செம்மண் அள்ளிக் கொண்டிருந்தனர்.

இதை கண்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் உடனடியாக அவர்களை தடுத்து பொக்லைன் எந்திரத்தின் சாவி எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டார். அப்போது அங்கு மண் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் வருவாய் ஆய்வாளர் வழிமறித்து, தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அங்கு கிடந்த கருங்கல்லை எடுத்து வருவாய் ஆய்வாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். அதில் ஒருவர் பிரபாகரனின் கழுத்தை கடித்துள்ளார்.

இதில் வருவாய் ஆய்வாளர் தலை, கை, கால், கழுத்து உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டு உடனடியாக பெருமாள் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் சென்று வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல்,

வழி மறித்தல், கொலை முயற்சி செய்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவின் கீழ் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன், தனபால், மணிகண்டன், கந்தசாமி ஆகிய நான்கு பேர் மீதும் துறையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn