இங்கிலாந்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் EVக்கான இறக்குமதி வரிகளை குறைக்க இந்தியா முடிவு.
இந்த ஆண்டு இறுதிக்குள் இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் முயற்சியில் இங்கிலாந்தில் இருந்து சில மின்சார வாகனங்களின் (EV கள்) இறக்குமதி வரிகளை குறைக்க இந்தியா முடிவெடுத்திருப்பதாக இரண்டு முக்கிய நபர்களை மேற்கோள்காட்டி ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. 80,000 டாலர்களுக்கு மேல் விலையுள்ள இங்கிலாந்தில் இருந்து ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்படும் 2,500 எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 30 சதவிகித சலுகைக் கட்டணத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது, பேச்சுவார்த்தைகள் ரகசியமானவை என்பதால் அடையாளம் காட்ட வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 40,000 டாலர் வரையிலான வாகனங்களுக்கு 70 சதவிகிதமும், 40,000 டாலருக்குக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு 100 சதவிகிதமும் வரி விதிக்கப்படுகிறது. CNBC-TV18ன் அறிக்கையின்படி, ஒரு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்ய உறுதியளிக்கும் பட்சத்தில், முழுமையாகக் கட்டப்பட்ட கார்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. எலக்ட்ரிக் கார்கள் மீதான வரிச் சலுகை குறித்த இந்தக் கொள்கை, கொண்டு வரப்பட்டால், டெஸ்லா உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் இது பயனளிக்கும் என அந்த அறிக்கை கூறுகிறது. மின்சார வாகன ஊடுருவல் மற்றும் மின் உற்பத்தி தொடர்பான உயர்மட்டக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். PLI, FAME மற்றும் ACC போன்ற திட்டங்கள் மின்சார வாகன உற்பத்திக்கு வலுவான ஊக்கத் தளத்தை உருவாக்கியுள்ளன என்று அரசாங்கம் நம்புகிறது என்று அறிக்கை கூறுகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான இறக்குமதிச் சலுகைகளுக்கான பிரிட்டனின் கோரிக்கை தடையற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தையில் நிலுவையில் உள்ள சில பிரச்சினைகளில் ஒன்றாகும். பிரதம மந்திரி ரிஷி சுனக் மற்றும் அவரது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கடந்த மாத இறுதிக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்வார்கள் என்று நம்பினர், ஆனால் இப்போது டிசம்பர் வரை ஒரு ஒப்பந்தம் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என்று ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தை இன்னும் நடந்து வருவதால், இங்கிலாந்து வர்த்தகத் துறையின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது, நடுத்தர வர்க்கம் மற்றும் பணக்கார வாங்குபவர்களிடையே மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. கார்களின் அதிக விலை, விருப்பங்களின் பற்றாக்குறை மற்றும் சார்ஜிங் நிலையங்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் நாட்டில் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வது தடைபட்டுள்ளது. சந்தையின் மின்சார வாகனப் பிரிவைத் திறப்பது உலகின் மிக நச்சுக் காற்றை கொண்ட ஒரு நாட்டில் தூய்மையான போக்குவரத்தை விரைவுபடுத்தும்.
இந்தியாவின் விலையுயர்ந்த சந்தையில், நாட்டின் அதிகம் விற்பனையாகும் மின்சாரக் காரான டாடா மோட்டார்ஸ் லிமிடெட்டின் Nexon.ev இன் விலை 1.5 மில்லியன் ரூபாய்க்கும் (18,000 டாலர் ) குறைவாக உள்ளது. ஜெர்மன் சொகுசு வாகன உற்பத்தியாளர்களான BMW AG, Mercedes-Benz Group AG மற்றும் Volkswagen AG இன் Audi ஆகியவை இந்தியாவில் 80,000 டாலக்கு மேல் மின்சார கார்களை விற்பனை செய்கின்றன. மின்சார வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்களுக்கான உள்நாட்டு உற்பத்தித் தொழிலைக் கட்டமைக்க மோடியின் அரசாங்கம் மின்சார வாகன இறக்குமதியில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்கிறது. 2021ம் ஆண்டில் அரசாங்கம் உள்ளூர் மின்சார வாகன உற்பத்திக்கான 3.1 பில்லியன் டாலர் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தை அறிவித்தது. மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி வரிகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று விவாதங்களை நன்கு அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். பிரிட்டிஷ்கார்கள் மற்றும் ஸ்காட்ச் விஸ்கி மீதான வரிகளை குறைப்பது உட்பட பல விஷயங்களில் இந்தியாவும் இங்கிலாந்தும் ஏற்கனவே தங்கள் நிலைப்பாட்டை மென்மையாக்கியுள்ளன என்று ப்ளூம்பெர்க் நியூஸ் முன்பு ஒருமுறை தெரிவித்தது.
இரு நாடுகளும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறைந்த கட்டணங்கள் மற்றும் சந்தை அணுகல் அதிகரிப்பு மூலம் இருதரப்பு வர்த்தகத்தை 2030க்குள் இரட்டிப்பாக்கும் என்று எதிர்பார்க்கிறது. இது இரு தலைவர்களுக்கும் ஒரு அரசியல் வெற்றியாக இருக்கும், இங்கிலாந்து-இந்தியா ஒப்பந்தம் பிரெக்ஸிட்டின் முக்கிய பரிசாகவும், இந்தியாவின் உற்பத்தி லட்சியங்களை உயர்த்துவதற்கான ஒரு வழியாகவும் கருதப்படுகிறது. கார்கள் மீது இந்தியா பலவிதமான இறக்குமதி வரிகளை விதிக்கிறது. அசெம்பிள் செய்யப்படாத வெளிநாட்டில் இருந்து வாங்கப்படும் வாகனங்களுக்கு 15 சதவிகிதம் முதல் 35 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.