கை, கால்களை கட்டி பிரியாணி அண்டாவுக்குள் அடைத்து பள்ளி மாணவன் கடத்தல் - பாதுகாப்பு கேட்டு பெற்றோர் மனு
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சாமியாடி சரவணன் (53), மனைவி சுபாசினி (36) ஆகியோர் குடும்பத்துடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில், எங்கள் மகன்கள் கதிர்வேல் (15), பிரேம்குமார் (9) எடமலைப்பட்டிபுதூரில் உள்ள அரசு பள்ளியில் படிக்கின்றனர்.
5ம் வகுப்பு படிக்கும் பிரேம்குமார் கடந்த 7ம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வீட்டிற்கு வரவில்லை. இதனால் பல இடங்களில் தேடினோம். பின்னர் இரவு 6 மணியளவில் வீட்டுக்கு வந்த என் மகனிடம் விசாரித்தேன். சக மாணவனின் அண்ணனான 9ம் மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆகியோர் சேர்ந்து பள்ளிவிட்டு வந்த தன்னை கை, கால்களை கயிற்றால் கட்டி, வாயில் துணியால் கட்டி அப்பகுதியில் உள்ள பாத்திர கடையின் பிரியாணி அண்டாவுக்குள் தூக்கி போட்டு அருகே நின்று கொண்டிருந்த லோடு ஆட்டோவில் ஏற்றினர்.
சிறிது தூரத்தில் லோடு ஆட்டோவை டிரைவர், உதவியாளர் ஓட்டி சென்றனர். பின்னால் 2 பேரும் நின்று கொண்டு வந்தனர். ராமச்சந்திரா நகர் மலைகாளியம்மன் கோயில் அருகே ஆட்டோ சென்றபோது பிரியாணி அண்டாவில் சத்தம் வருவதை பார்த்து லோடு ஆட்டோவை நிறுத்தி இறங்கி வந்து டிரைவர் எங்கள் மகனை மீட்டதுடன், சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரித்தபோது விளையாட்டுக்கு செய்ததாக கூறியுள்ளனர்.
அதன் பின்னர் தான் மகன் வீட்டுக்கு வந்தான். இதுபற்றி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் தெரிவித்தோம். அதன்பேரில் வாடகை பாத்திரக்கடை உரிமையாளர் மற்றும் டிரைவரிடம் போலீசார் விசாரித்தனர். எனது மகனுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும் என்று கூறியுள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision