தமிழ்நாட்டில் நடிகர்களை வைத்து மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் -காதர் மொய்தீன் பேட்டி

தமிழ்நாட்டில் நடிகர்களை வைத்து மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் -காதர்  மொய்தீன் பேட்டி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கலந்து கொண்டார். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காதர் மொய்தீன்....கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் கட்சியின் தேசிய பொதுக்குழு டெல்லியில் கூட்டப்படும். டெல்லியில் தலைமை அலுவலகமும் திறக்கப்பட உள்ளது.

இந்திய மக்களிடம் பா.ஜ.க விற்கான ஆதரவு குறைந்து தான் வருகிறது. மூன்றாம் முறையாக ஆட்சி அமைப்போமா என்கிற சந்தேகம் அவர்களுக்கே வந்துள்ளது. இந்தியா கூட்டணியின் பிரதான நோக்கம் பா.ஜ.க வை எதிர்க்கும் கட்சியினர் எம்.பியாகி புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பது தான். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த கட்சியின் எதிரெதிர் கொள்கை உடையதாக இருக்கலாம். ஆனால் நடக்கக் கூடியது நாடாளுமன்ற தேர்தல் என்பதால் அதில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள அனைவரும் செயல்பட்டு வருகிறோம். தேர்தல் ஆணையத்தில் 3000 க்கும் மேற்பட்ட கட்சிகள் பதிவாகி உள்ளது. தமிழ், தமிழகம் என்கிற பெயரில் மட்டுமே 21 கட்சிகளுக்கு மேல் பதிவாகி உள்ளது. ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்துள்ளார்.

அந்த பெயர் நன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பெயர்களை வைத்தோ, நடிகர்களை வைத்தோ மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். எல்லா நடிகர்களும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கிடையாது. அவர்களுக்கு தனி வரலாறு உண்டு. தமிழ்நாட்டில் பெரியார் போட்ட விதை அதை பின்பற்றிய அண்ணா, அவரை தொடர்ந்து கலைஞர் செய்த சேவைகள் இன்றளவும் இருந்து கொண்டு இருக்கிறது. தமிழ் என்பது வெறும் மொழி கிடையாது. அது தனி பண்பாடு, வரலாறு, கலச்சாரத்தை கொண்டது. தி.மு.க தான் அந்த கொள்கை அனைத்தையும் பின்பற்றும் கட்சியாக இருக்கிறது. அதற்கு ஈடாக தற்போது வரை எந்த கட்சியும் இல்லை. திடீரென வந்து ஒருவர் எதையும் மாற்ற முடியாது.அரசியலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற நோக்கில் எங்கள் கட்சி உருவாகப்படவில்லை.சமுதாயத்திற்காக பாடுபட வேண்டும் என்கிற நோக்கில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு எம்.பி ஒருவர் போனாலும் போதும் என்கிற நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம். ஒரு இடம் கொடுத்தாலும் நிற்போம் அதற்கு மேற்பட்ட இடங்கள் கொடுத்தாலும் நிற்போம். நிச்சயம் எங்களுக்கு கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படும். திமுக கூட்டணியில் தான் எம்.பி, எம்.எல்.ஏ ஆகி இருக்கிறோம். நாங்கள் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற இராமநாதபுரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என எங்கள் கட்சியினர் விரும்புகிறார்கள். அதை கூட்டணி தலைமை முடிவெடுக்கும்.ஏணி சின்னம் எங்கள் சின்னம் அந்த  சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision