திருச்சியில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்

திருச்சியில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்

திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் மெட்ரோ துரித போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் வழங்கப்பட்டது.

இதில் திருச்சி மெட்ரோவின் ரூட் மற்றும் அமைய உள்ள நிறுத்தங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..... திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் பெருந்திரள் மற்றும் துரித போக்குவரத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (Detailed Feasibility Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான மு.அ.சித்திக் சென்னை, நந்தனதில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில்  சமர்பித்தார்.

அதன்படி, திருச்சி மாநகராட்சியில் சமயபுரம் முதல் வயலூர் வரை 19 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 19 பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை 26 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 26 பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் 2 வழித்தடங்களில் 45 கி.மீ நீளத்திற்கு 45 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகராட்சியில், பேட்டை முதல் சங்கனாபுரம் வரை 12.39 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 13 துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், பாளையம்கோட்டை முதல் பொன்னாக்குடி வரை 12.03 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 12 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், சங்கர்நகர் முதல் வசந்தநகர் வரை 14.65 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 3-ல் 15 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் 3 வழித்தடங்களில் 39.07 கி.மீ நீளத்திற்கு 40 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சியில், கரபுரநாதர் கோவில் முதல் அம்மாபேட்டை வழியாக அயோத்தியாப்பட்டணம் இரயில் நிலையம் வரை 17.16 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 1-ல் 19 துரித போக்குவரத்திற்கான நிலையங்களும், கருப்பூர் முதல் சேலம் இரயில் நிலையம் சந்திப்பு வழியாக நல்லிகலப்பட்டி வரை 18.03 கி.மீ நீளத்திற்கு வழித்தடம் 2-ல் 19 துரித போக்குவரத்திற்கான நிலையங்கள், என மொத்தம் 2 வழித்தடங்களில் 35.19 கி.மீ நீளத்திற்கு 38 நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தற்போதுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அடுத்த 30 ஆண்டு மக்கள் தொகையை கருத்தில் கொண்டு இந்த பெருந்திரள் துரித கால போக்குவரத்து உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கையில் மாற்றம் வரலாம் என்றும் மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் தி.அர்ச்சுனன், (திட்டங்கள்), தலைமை பொது மேலாளர்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision