திருச்சியில் புதிய சுங்கச்சாவடி அகற்ற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

திருச்சியில் புதிய சுங்கச்சாவடி அகற்ற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்.... திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் (NH-67), வாளவந்தான்கோட்டையில் அமைந்துள்ள சுங்கச் சாவடியானது சுமார் 13 வருடங்களுக்கு மேலாக சுங்கக் கட்டணம் வசூல் மையமாக செயல்பட்டு வரும் நிலையில், துவாக்குடி முதல் ஜீயபுரம் வரையிலான 24 கிலோ மீட்டர் கொண்ட அரைவட்ட சுற்றுச் சாலையின் தொடக்கத்திலேயே, வாளவந்தான்கோட்டை சுங்கச் சாவடிக்கு அரை கிலோ மீட்டர் இடைவெளி கூட இல்லாமல், துவாக்குடியில் புதிதாக சுங்கச் சாவடி அமைக்கப்படுவதை அறிந்த,

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ப. குமார், பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசு விதிகளின்படி அருகருகே இரண்டு சுங்கச் சாவடி அமைக்கக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி கடந்த (21.11.2021) அன்று மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதோடு "60 கிலோ மீட்டர் இடைவெளிக்குள் இருக்கும் சுங்கச் சாவடிகள் மூன்று மாதங்களுக்குள் அகற்றப்படும்" என்று (22.3.2022) அன்று மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது துறை அமைச்சர் கூறியதை மேற்கோள் காட்டி, மீண்டும் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரின் பார்வைக்கு கடிதம் எழுதி உள்ளதோடு, இக்கோரிக்கையை நிவர்த்தி செய்திட கழகத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும் வந்துள்ளது. இந்நிலையில், தற்போது சுங்கச் சாவடி பணிகள் முடிவுற்று (14.2.2024) அன்று முதல் சோதனை முறையில் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக வாகனங்களில் பயணிக்கும் மக்கள் அரை கிலோ மீட்டருக்குள் இரண்டுமுறை சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. மக்கள் விரோத இச்செயலுக்கு, விடியா திமுக அரசும், திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் திருச்சி திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் இதுவரையில் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருவது வேதனைக்குரிய விஷயமாகும். இந்நிலையில், பொதுமக்களை நேரடியாக பாதிக்கின்ற வகையில், அரசு விதிகளுக்குப்புறம்பாகவும், மக்களவையில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதிக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் மத்திய அரசையும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய நிர்வாகத்தையும், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத விடியா திமுக அரசையும் கண்டித்தும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பில், (23.2.2024) வெள்ளிக்கிழமை மாலை 05:00 மணியளவில், துவாக்குடி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான M.R. விஜயபாஸ்கர் தலைமையிலும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ப. குமார், Ex. M.P., முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மக்கள் நலனை முன்வைத்தும், மத்திய அரசையும், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision