புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நூற்றாண்டு விழா

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நூற்றாண்டு விழா

திருச்சி புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் நூற்றாண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இறைவழிபாட்டினைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு ஆரம்பமானது.

நூற்றாண்டு விழாவின் முதன்மை சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற மக்களவை உறுப்பிவர் கனிமொழி கருணாநிதி, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சிலுவை சபையின் மாநிலத் தலைவி அருட்சகோதரி லூர்து அடைக்கலசாமி, திருச்சிலுவை சபையின் மேனாள் மாநில தலைவிகள் கல்லூரியின் மேனாள் செயலர்கள், மேனாள் முதல்வர்களும் வருகை தந்து சிறப்பு செய்தனர்.

நிகழ்வினுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்கும் விதமாக கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி கிறிஸ்டினா பிரிஜிட் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் வளர்ச்சிக்காகத் தன்னலமற்ற சேவையாற்றிய பெருந்தகையாளர்களைச் சிறப்புச் செய்யும் வகையில் திருச்சிலுவை சபையின் மேனாள் மாநில தலைவிகளுக்கும், கல்லூரியின் மேனாள் செயலாளர்களுக்கும், கல்லூரியின் மேனாள் முதல்வர்களுக்கும், மேனாள் பேராசிரியர்களுக்கும் முதன்மை சிறப்பு விருந்தினர் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பு செய்தனர்.

கல்லூரியின் பல்துறைகளில் சாதனை படைத்த பேராசிரியர்களுக்கும், கல்லூரிப்பணியில் 25 ஆண்டுகள் நிறைவு செய்த பேராசிரியர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் கடந்த 2021 - 2022 கல்வியாண்டில் பல்கலைக்கழகத் தரவரிசைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், கல்லூரியின் பல்வேறு துறைகளிலும் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கும் பொற்பதக்கங்களும், விருதுகளும் சிறப்பு விருந்தினரால் வழங்கப்பட்டது. கல்லூரியின் நூற்றாண்டு மலரினைச் சிறப்பு விருந்தினர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வெளியிட கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி கிறிஸ்டினா பிரிஜிட், கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி ஆனி சேவியர் மற்றும் கல்லூரி வெவ்வேறுத்துறை புலத்தலைவர்களும் பெற்றுக் கொண்டனர்.

நூற்றாண்டு நிறைவு விழாவிற்கான சிறப்புரையில் சிறப்பு விருந்தினர் கல்லூரி நிர்வாகத்தையும், பேராசிரியர்களையும், மாணவர்களையும் பாராட்டினார். ஜெஸிந்தா லாசரஸ் (IAS), தங்க மங்கை கோமதி மாரிமுத்து போன்ற சாதனை மங்கைகளை உருவாக்கிய பெருமைமிகு கல்லூரி என்றும். கொரோனா காலக்கட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் வானொலி ஒளிப்பரப்புச் சேவையின் மூலம் சமூகப்பணி ஆற்றியமையையும், பெண்கள் தங்கள் கனவுகளை விட்டுக் கொடுக்காமல் தன்னைப் பற்றிய சுய சிந்தனையோடு செயல்பட வேண்டும் என்றும், நமது கனவுகளுக்கு எது தடையாக வந்தாலும் அதை தாங்களே மாற்றிக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்றும், பெண் கல்விக்காகச் செயலாற்றிவரும் கல்லூரியின் அளப்பரிய சேவையைப் பாராட்டியும் சிறப்பு விருந்தினர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தமது சிறப்புரையை ஆற்றினார்.

"நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை" என்கின்ற பாரதியின் வரிகளை நினைவு படுத்தும் விதமாய் விளங்குகின்றனர் புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி மாணவிகள் கல்வி மட்டுமே சமத்துவத்தை மலரச்செய்யும் என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் வாக்கினைச் செயல்படுத்திவரும் கல்லூரி பெண்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்களாகவும், நல்ல சமுதாயத்தைப் படைக்கக் கூடியவர்களாகவும் இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் உருவாக வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துரை வழங்கினார்.

கல்லூரியின் அடிப்படையான தொடக்க நிலையிலிருந்து இன்றைய இமாலய வளர்ச்சியின் பயணத்தையும், கடந்த கல்வியாண்டுகளின் கல்லூரியின் அனைத்துத் துறைகளின் சாதனைகள் அடங்கிய ஆண்டறிக்கை காணொளி மூலம் காட்சிப்படுத்தப்பட்டது. திருச்சிலுவை சகோதரிகளின் தலைமையகத்தின் வாழ்த்துச் செய்தியானது திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியின் துணை முதல்வரும், வரலாற்றுத் துறையின் துறைத்தலைவருமான முனைவர் அருட்சகோதரி இசபெல்லா ராஜகுமாரி நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் நூற்றாண்டு நிறைவு விழா நிறைவுற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn