அதிகாரிகளுக்கு வேளாண்மை தெரிந்திருக்க வேண்டும் - திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அதிகாரிகளுக்கு வேளாண்மை தெரிந்திருக்க வேண்டும் - திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் "வேளாண் சங்கமம் 2023" நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (27.7.2023) இன்று வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சி அவர் பேசுகையில்.... 1990ல் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கி, விவசாய விளை பொருள்  உற்பத்திக்கு உறுதுணையாக இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு 2 லட்சத்து 20 ஆயிரம் இலவச இணைப்புகள் தான் வழங்கியது. தற்போது திமுக ஆட்சி காலத்தில் இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இலவச இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னையில் நடத்தப்பட்ட வேளாண் உற்பத்தியாளர் கண்காட்சி தற்போது திருச்சியில் நடைபெறுகிறது. துணி உற்பத்தி, இயந்திரங்கள் உற்பத்தி போன்றவற்றிற்கு கண்காட்சி நடத்துவது போல வேளாண் கண்காட்சி நடத்துவதும் அவசியம். நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்பு கூட்டு தொழில் நுட்பங்கள் என வேளாண்மை துறையில் ஏராளமாக வந்து கொண்டுள்ளன.அவற்றை பற்றிய அடிப்படை தகவல்களை விவசாயிகளுக்கும், வேளாண் மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

அதற்காகத்தான் இதுபோன்ற வேளாண் கண்காட்சிகள் அவசியமானது. வேளாண் துறை அதிகம் வளர்ந்து வருகிறது என்பதற்கான அடையாளமாகவும் கண்காட்சி நடத்தப்படுகிறது. விளை பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கவும், அதற்கு உரிய விலை கிடைக்கவும் நவீன தொழில்நுட்ப அறிவு பயன்படுத்தப்பட வேண்டும். அதிக விளைச்சல் தரும் புதிய ரகங்கள், பாரம்பரிய பயிர் ரகங்கள், உத்திகள், சோலார் சக்தியில் இயங்கும் நவீன வேளாண் இயந்திரங்களை உழவர்களிடம் கொண்டு சேர்க்கவும் இது போன்ற கண்காட்சிகள் தேவை.

இதில், தமிழக வேளாண் துறை மட்டுமின்றி, மற்ற துறைகளும் பங்கெடுத்துள்ளன.இத்தகைய கூட்டு முயற்சி எல்லா துறைகளிலும் தேவைப்படுகிறது. வேளாண்துறை என்பது வாழ்க்கையாகவும் பண்பாடாகவும் இருந்தாலும் வருமானம் தரும் தொழிலாக மாற வேண்டும். உழவர்கள் உற்பத்தியாளராக மட்டும் இறந்து விடாமல் அவர்களும் விற்பனையாளர்களாக மாற வேண்டும் என்பதற்காக தான் கருணாநிதி முதல்வராக இருந்த போது உழவர் சந்தைகளை அமைத்துக் கொடுத்தார். அதன் அடுத்த கட்டமாக தற்போதுள்ள ஆட்சியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அவற்றுக்கு மூலதன உதவி, கடன் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. இவர்களின் உற்பத்தி பொருட்களை மாநகராட்சி அங்காடிகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயம் என்பது நிலம் இருப்போர் மட்டும் மேற்கொள்ளும் தொழிலாக இல்லாமல் விரும்பியவர்கள் அனைவரும் மேற்கொள்ளும் தொழிலாக மாற வேண்டும்.நிலத்தை விட அதிக மதிப்புள்ள வேறு எதுவும் இல்லை. அவர்களை மதிப்புக்குரியவர்களாக மாற்ற வேண்டும்.உழவர்களுக்கு தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும் அதிகாரிகளுக்கு வேளாண்மை தெரிந்திருக்க வேண்டும் இவை இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டால், வேளாண்மை வர்த்தக தொழிலாக மாறும். அதற்கு இது போன்ற கண்காட்சிகள் அடித்தளம் அமைக்கும். 

மேலும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, 75 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு வேளாண் தொகுப்பு திட்டத்தை பெறுவதற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என் முதலமைச்சர் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision