இரவு மற்றும் பகல் நேரங்களிலும் சில்லறை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்
திருச்சியில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த காந்தி சந்தையில் காய்கறிகள், பழங்கள், பூக்கடைகள், இறைச்சி கடைகள், மீன் கடைகள் என 1000 க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த வியாபார கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக காந்தி சந்தை மூடப்பட்டு மொத்த வியாபாரம் பொன்மலை ஜி கார்னர் மைதானத்திலும், சில்லறை விற்பனை மாநகரில் 10 இடங்களிலும் செயல்பட்டது. கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து உயர்நீதிமன்றத்தின் வழிக்காட்டல் படி காந்தி மார்கெட் மீண்டும் செயல்பட தொடங்கியது.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமாகி வருவதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் சில்லறை வியாபாரத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் காந்தி சந்தையில் உள்ள 27 க்கும் மேற்பட்ட வியாபார சங்கங்களின் நிர்வாகிகளோடு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் மாநகராட்சி உதவி ஆணையர் தலைமையில் கூட்டம் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் சில்லறை விற்பனைக்கு தடை விதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜீலு, காந்தி சந்தையை விட்டு வெளியே செல்ல மாட்டோம். காந்தி சந்தையிலையே இரவு நேரங்களில் மொத்த வியாபாரமும், பகல் நேரங்களில் சில்லறை வியாபாரமும் செய்ய அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். அது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து முடிவை சொல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நாங்கள் வியாபாரம் செய்வோம் ஆனால் காந்தி சந்தையிலிருந்து வெளியேற மாட்டோம் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr