மணப்பாறை அருகே மீன்பிடித் திருவிழா
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொய்கைப்பட்டி ஊராட்சி கல்பாளையத்தான்பட்டியில் கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அணைக்குளத்தில் வியாழக்கிழமை விடியற்காலை 6 மணிக்கு மீன் பிடித்திருவிழா நடைபெற்றது.
அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னதாகவே குளக்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். ஆலய வழிபாட்டிற்கு பின் ஊராட்சிமன்ற தலைவர் ரோஸின் சகாயமேரி ராஜசேகர் மற்றும் ஊர் நாட்டாண்மைகள் ந.ப.முத்தையா கவுண்டர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மீன் பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர்.
குளக்கரையில் கையில் வலைகளுடன் கூடியிருந்த பொதுமக்கள் துள்ளி குதித்து ஓடி மீன் பிடிக்க தொடங்கினர். ஜாதி, மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் நடைபெறும் இந்த மீன்படி திருவிழாவில், சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்திருந்தனர். பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள் ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்கத் தொடங்கினர். அதில் மீன்பிடித்தவர்கள் கைகளுக்கு நாட்டு வகை மீன்களான கெளுத்தி, கட்லா, ஜிலேபி, கெண்டை, கொரவை, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. கண்மாயில் அதிக எண்ணிகையில் மக்கள் குவிந்ததாலும் போதிய அளவில் மீன் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn