நீயா - நானா மோதிக்கொண்ட ஆம்னி பேருந்துகள் - அலறிய பயணிகள்
தமிழகத்தின் மையப் பகுதி இருக்கிறது திருச்சி மாவட்டம். இங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருச்சியில் இருந்து சென்னைக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.
விரைவாகவும், சொகுசாகவும் செல்வதற்கு பெரும்பாலான பயணிகள் ஆம்னி பேருந்துகளை நாடுகின்றனர். இது ஒரு புறம் இருக்க ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு இரு பேருந்துகளுக்கிடையே போட்டி ஏற்பட்டதில் ஒரு பேருந்துடன் மற்றொரு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் பேருந்தினுள் இருந்த பயணிகள் அலறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் நகர்ப்புற மற்றும் ஆம்னி பேருந்துகள் போட்டி போட்டு செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இதில் பாதிப்படைகின்றனர். மத்திய பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு என முறையாக இடம் இல்லாததால் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி வைப்பதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்து வருகிறது. மேலும் இது போன்று போட்டி போட்டுக் கொண்டு பேருந்துகளை இயக்கப்படுவதால் பேருந்து நிலையத்தின் பகுதி செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முறையான வழிமுறைகளை வகுத்து தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கி எச்சரிக்க வேண்டும் என பேருந்து பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.