சிங்கப்பூரை ஆளப்போறார் தமிழன் !!

சிங்கப்பூரை ஆளப்போறார் தமிழன் !!

சிங்கப்பூர் நாட்டின் துணைப்பிரதமராகவும், நிதி அமைச்சராகவும் 2011 முதல் 2019 வரை சிறப்பாக பணியாற்றியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (வயது 66). கட்சி சார்பற்ற அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மக்கள் செயல் பாட்டு கட்சியில் (பிஏபி) இருந்து தர்மன் விலகினார்.

சிங்கப்பூரில் 6வது அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இதில், 2017ம் ஆண்டில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு, 6 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்த ஹலிமா யாகோப் போட்டியிடவில்லை. தேர்தலில் தர்மன் சண்முகரத்னம், நங் கோக் சாங், தான்கின் லியான் என 3 பேர் போட்டு டியிட்டனர். இத்தேர்தலில் 93.41 சதவீத வாக்குகள் பதிவாயின.
வாக்குப்பதிவு  முடிந்த உடனே,  வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இதில், 70.40 சதவிகித வாக்குகள் பெற்று, புதிய அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டார் என தேர்தல் துறை நேற்று இரவு அறிவித்தது. தர்மன் சண்முகரத்னத்துக்கு 17 லட்சத்து 46 ஆயிரத்து 427 வாக்குகளும், நங்கோக் சாங்குக்கு 3 லட்சத்து 90 ஆயிரத்து 41 வாக்குகளும், தான்கின் லியானுக்கு 3 லட்சத்து 44 ஆயிரத்து 292 வாக்குகளும் கிடைத்தன.

பொருளாதார நிபுணரான தர்மன், சிங்கப்பூருக்கான அரசு சேவையில், முக்கியமாக பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளுடன் தொடர்புடைய பணிகளில் பெரும் பங்காற்றினார். பல்வேறு உயர்மட்டப் பன்னாட்டுப் பேரவைகளுக்குத் தலைமை தாங்கி செயற்பட்டார். தர்மன் தற்போது முப்பது நாடுகள் அடங்கிய பொது மற்றும் தனியார் துறைகள் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பொருளாதார மற்றும் நிதித் தலைவர்களின் உலகளாவிய பேரவையின் தலைவராக உள்ளார். ஐ.நா. தண்ணீரின் பொருளாதாரத்திற்கான உலகளாவிய ஆணையத்தின் இணைத் தலைவராகவும் உள்ளார். அத்துடன் ஐக்கிய நாடுகளின் பன்முகத்தன்மைக்கான உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

1957ம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது பாட்டனார் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தர்மனின் தந்தை கே. சண்முகரத்தினம் மருத்துவப் பேராசிரியராவார். ஆங்கிலோ-சீனக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் லண்டன் பொருளியக் கல்லூரியில் பொருளியலில் பட்டம் பெற்றார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுமாணிப் பட்டமும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொதுப்பணித் துறையில் முதுமாணிப் பட்டமும் பெற்றார்.

தர்மன் ஜப்பானிய-சீன வழக்கறிஞரான ஜேன் யுமிக்கோ இட்டோகி என்பவரைத் திருமணம் செய்தவர். இவர்களுக்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணுமாக நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision