திருச்சி மணல் குவாரியையும் விட்டு வைக்காத அமலாக்கதுறை
திருச்சி மாவட்டத்தில் தாளக்குடி, நொச்சியம் மாதவ பெருமாள் கோவில், கூகூர் ஆகிய பகுதிகளில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் மணல் அள்ளிய அதிகமான விலைக்கு விற்ற குற்றச்சாட்டு இருந்துவருகிறது. குறிப்பாக மணல் குவாரியில் மூன்று அடி தான் மணல் அள்ள வேண்டும் என விதிகள் உள்ள நிலையில் 10 அடிக்கு மேல் மணல் அள்ளப்பட்டுள்ளது.
மேலும் மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த மாதம் 12 ம் தேதி 3க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு கார்களில் வந்து கொள்ளிடம் மணல் குவாரி மற்றும் மணல் இருப்பு வைத்திருக்கும் (stock point) பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை 8:00 மணிக்கு தொடங்கி இரவு 07:00 மணி வரை சோதனை நடைபெற்றது.
மத்திய துணை ராணுவ படையை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்தி வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அச்சோதனையின் முடிவில் கட்டு கட்டாக ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர். மேலும் உதவி பொறியாளர் சாதிக் பாஷா, இளநிலை பொறியாளர் ஆறுமுகம் மற்றும் உதவியாளர் சத்யராஜ் ஆகிய மூன்று பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்து நள்ளிரவு 2 மணி வரை விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்குப் பிறகு மேல்விசாரணைக்கு அழைக்கும் போது சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும் என நிபந்தனையுடன் அவர்களை விடுவித்து சென்றனர். இந்த நிலையில் சுமார் ஒரு மாத காலத்திற்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் திருச்சியில் உள்ள 3 மணல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
கொண்டையம் பேட்டை தாளக்குடி குவாரி செயல்படாத நிலையில் தற்போது ஸ்டாக் பாயிண்ட்டில் உள்ள மணல் அளவு எவ்வளவு? நாள் ஒன்றுக்கு எவ்வளவு மணல் விற்பனை செய்யப்படுகிறது? அனுமதிக்கப்பட்ட அளவில் மணல் விற்கப்படுகிறதா? என்பது குறித்து தமிழக நீர்வள ஆதாரத்துறை கனிம பாதுகாப்பு கோட்ட அதிகாரிகளிடம், அமலாக்க துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
ஒட்டு மொத்த சோதனைக்கு பிறகு ஆவணங்களை அனைத்தையும் காட்சிகளாகவும், படமாக்கி வைத்துள்ளதால் மணல் குவாரி தற்போதைக்கு துவங்காது என்ற நிலை உருவாகியுள்ளது. மேலும் முக்கிய புள்ளிகள் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் உள்ளதும் தகவல் வெளியாகி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision