கிணற்றில் இறங்கிய சகோதரிகள் உயிரிழப்பு

கிணற்றில் இறங்கிய சகோதரிகள் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் டிரைவர் பழனிச்சாமி. இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு மகள்கள் தர்ஷினி (19) இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வந்தார். மற்றொரு மகள் வேம்பு (16) இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார். மகன் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று காலை இவர்களுக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை செய்யும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது தாய் சசிகலாவுடன் மூன்று பிள்ளைகளும் சென்றுள்ளனர். தாய் சசிகலா வயலில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் தர்ஷனியும், வேம்பும் சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.

அப்போது வேம்பு கிணற்றில் மூழ்கியுள்ளார்.தங்கை மூழ்குவதை கண்ட தர்ஷினி தங்கச்சியை மீட்பதற்காக தண்ணீரில் குதித்துள்ளார். தங்கையை மீட்கும் முயற்சி பலன் அளிக்காத நிலையில் சகோதரிகள் இருவரும் கிணற்றில் மூழ்கினர். இதனை கரையின் மீது நின்று பார்த்துக் கொண்டிருந்த தம்பி லோகேஸ்வரன் உதவிக்கு ஆட்களை அழைத்து சத்தம் போட்டு உள்ளார்.

அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய சகோதரிகளை சடலமாக மீட்டனர். இதையடுத்து முசிறி போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிணற்று நீரில் மூழ்கி ஒரே நேரத்தில் சகோதரிகள் பரிதாபமாக இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision