ரயில் டிக்கெட் விற்பனை - வீடியோ காட்சி வைரல்
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். இதில் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட் மூலம் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில் டிக்கெட்டுகள் பெறுவதற்கு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டுகள் வாங்குவதால் கடைசி நேரத்தில் ரயிலை பிடிப்பதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதனை போக்க பயணிகளின் வசதிகளுக்காக எந்திரம் மூலம் ரயில் டிக்கெட் பெறுவதற்கான வசதி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற ஊழியர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்காக பயணி ஒருவர் 135 ரூபாய் கொடுத்து முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டை பெற்றுள்ளார். ஆனால் ரயில் புறப்பட்டு விட்டதால் அந்தப் பயணி மறுபடியும் டிக்கெட் விற்பனையாளர்கள் கொடுத்துவிட்டு ரத்து செய்யுமாறு கூறியுள்ளார். அந்த டிக்கெட்டை பெற்றுக் கொண்ட அந்த விற்பனையாளர் டிக்கெட் ரத்து செய்வதற்கு 30 ரூபாய் பிடித்தம் போக மீதி 105 ரூபாய் அந்த பயணியிடம் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து ரயில் டிக்கெட் பெறும் எந்திரம் அருகில் அந்த பயணி காத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மற்றொரு பயணி சென்னை செல்வதற்கான டிக்கெட் வரும்போது ஏற்கனவே ரத்து செய்வதற்காக கொடுக்கப்பட்ட அந்த ரயில் டிக்கெட்டை மற்றொரு பயணிக்கு டிக்கெட் விற்பனையாளர் கொடுத்துள்ளார்.
மேலும் அந்த டிக்கெட் விற்பனையாளர் வைத்திருக்கும் பையில் காலாவதியான முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட் உள்ளதாகவும் அதை அவசரத்திற்கு வரக்கூடிய ரயில் பயணியிடம் விற்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ரயில்வே துறைக்கு இணையதளம் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பயணி தெரிவித்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது உடனடியாக இதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.