ரவுடி உட்பட இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

ரவுடி உட்பட இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களிடம் பணத்தை பறித்து செல்லும் குற்றவாளிகள்,

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்கொடுமை குற்றங்களை தடுக்கவும் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த (17.04.23)-ம் தேதி தில்லைநகர் வாமடத்தில் ஒய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் காவல்துறைக்கு தகவல் கூறியதாக நினைத்து இரண்டு இருசக்கர வாகனத்தை எரித்து கொலை மிரட்டல் விடுத்ததாக பெறபட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தநிலையில், அதே நாளன்று சாஸ்திரிரோட்டில் உள்ள டீ கடை அருகில், சைக்கிளில் தையல்மிஷின் வைத்து தொழில் செய்யும் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ.2000/- பறித்து கொண்டு 3 நபர்கள் தப்பி சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதன் விசாரணையில் தென்னூர் வாமடத்தை சேர்ந்த 1.வீரப்பன் (எ) ராஜ்குமார் (23) த.பெ.சப்பாணி 2.மாரியப்பன் (19) த.பெ.சக்திவேல் 3.விக்னேஷ் த.பெ.சப்பாணி ஆகியோர்களை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில், எதிரி வீரப்பன் (எ) ராஜ்குமார் மீது கோட்டை காவல்நிலையத்தில் அரிவாள் மற்றும் கத்தியை காட்டி பணம் பறித்தாக 2 வழக்குகளும், கஞ்சா விற்பனை செய்ததாக 1 வழக்கும், தில்லைநகர் காவல்நிலையத்தில் கத்தியை காட்டி பணம் பறித்தாக 6 வழக்குகளும், ஆயுதம் வைத்திருந்ததாக 1 வழக்கும், வீண் பிரச்சனை செய்து கத்தியால் தாக்கியதாக 2 வழக்குகளும்,

உறையூர் காவல்நிலையத்தில் கத்தியை காட்டி பணம் கொள்ளையடித்ததாக 1 வழக்கும், ஒய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் காவல்துறைக்கு தகவல் கூறியதாக நினைத்து இருசக்கர வாகனத்தை எரித்து கொலை மிரட்டல் விடுத்ததாக 1 வழக்கு உட்பட 14 வழக்குகளும், எதிரி மாரியப்பன் 74 வயது முதியவரை கட்டையால் தாக்கியதாக தில்லைநகர் காவல்நிலையத்தில் 1 வழக்கு என எதிரிகள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

எனவே, எதிரிகள் வீரப்பன் (எ) ராஜ்குமார் மற்றும் மாரியப்பன் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு தில்லைநகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.