தமிழர் தேர்வானது தமிழருக்குக் கிடைத்த பெருமை - அமைச்சர் பெருமிதம்

தமிழர் தேர்வானது தமிழருக்குக் கிடைத்த பெருமை - அமைச்சர் பெருமிதம்

உலக அளவில் இயங்கி வரும் ரோட்டரி சங்கங்களுக்கான பன்னாட்டு இயக்குனராக திருச்சியை சேர்ந்த எம்.முருகானந்தம் தேர்வாகியுள்ளார். தொழிலதிபரான இவர் எக்ஸெல் குழுமங்களை நடத்தி வருகிறார். இவருக்கு ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில் பாராட்டு விழா, மதுரை வேலம்மாள் ஐடாஸ் கட்டர் அரங்கில் நடைபெற்றது.

ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர்.ஆனந்த ஜோதி தலைமை தாங்கினார். ரோட்டரி பன்னாட்டு முன்னாள் இயக்குனர் கரூர் பாஸ்கர் சொக்கலிங்கம், வருங்கால ஆளுநர்கள் ஆர்.ராஜா கோவிந்தசாமி, பெரம்பலூர் கார்த்திக், திருச்சி ஆர்.சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

அப்போது காணொளி மூலம் வாழ்த்திப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ரோட்டரி சங்கம் உலகம் முழுவதும் சிறப்பான சேவைகளை செய்து வருகிறது. சமூக சேவையை பிரதான நோக்கமாகக் கொண்டு பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். 'சமூக மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் கல்விதான் அதற்கு ஆகச் சிறந்த ஒரே வழி.!' கல்வி சார்ந்து பள்ளிகளுக்கு பல்வேறு நலப் பணிகளை ரோட்டரி சங்கம் சிறப்பாக செய்து வருகிறது. உலக அளவில் இயங்கும் ரோட்டரி சங்கத்திற்கு, இந்தியாவில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.

இத்தகைய சூழலில், ரோட்டரி சங்க பன்னாட்டு இயக்குனராக தமிழரான திருச்சியைச் சேர்ந்த முருகானந்தம் இருப்பது தமிழர்களுக்கெல்லாம் பெருமை " என்று வாழ்த்திப் பேசினார். இந்த பாராட்டு விழாவில், மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரோட்டரி 3000 சங்க உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பெரிய விழாவாக நடத்தப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision