வரலாற்றின் வழியில் - 1200 ஆண்டுகள் பழமையான கோவில் !!
திருச்சியில் எண்ணற்ற வரலாற்றுச் சின்னங்கள் இருப்பதை நாம் அறிவோம். பெரும்பான்மையினருக்கு திருச்சியின் வரலாறு என்றவுடன் சோழ பேரரசு தான் நினைவுக்கு வரும், இது மிக சரியான ஒன்று, ஆனால் இன்றைய கட்டுரையில் நாம் காணப் போகும் கோவிலில் சோழர்கள், பல்லவர்கள் மற்றும் பாண்டியர்கள் அனைவரையும் பற்றியும் பார்க்கலாம்.
சோழர்கள் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் தான். இவர்கள் இருவரும் நாம் இன்று பார்க்கப் போகும் வரலாற்றுக் கோவிலிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்த கோவில் திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் காளிப்பட்டி என்ற இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்களாந்தபுரம் என்ற ஊரில் இருக்கிறது. முதல் தகவல், சிங்களாந்தபுரம் என்பதே வரலாற்றில் ஒரு காரணப் பெயர் ஆகும். சிங்களாந்தகன் என்பது சிங்களத்துக்கு அந்தகன் என்ற பொருளைக் குறிக்கிறது.
அந்தகன் என்றால் எமன், சிங்களாந்தகன் என்ற பெயர் ராஜராஜ சோழனின் பெயர்களின் ஒன்று. அவர் இலங்கையை போரிட்டு வென்ற பின் இப்பெயரை அவர் பெற்றிருக்கிறார். ராஜராஜ சோழனின் காலத்திலேயே அல்லது ராஜேந்திரச் சோழனின் காலத்தில் சிங்களாந்தபுரம் என்று இந்த ஊர் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த ஊரில் அகிலாண்டேஸ்வரி சமேத அமர சுந்தரேஸ்வரர் கோவில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோயிலாகும். ராஜராஜனின் பெயரான சிங்களாதபுரம் என்ற பெயரைக் கொண்ட ஊரில், ராஜேந்திரனின் கல்வெட்டுகளை கொண்ட இந்த கோவில் அவர்களின் காலத்திற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே பல்லவர் காலத்திலேயே கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். அதற்கான சிற்ப கலைகள் இங்கே காணப்படுகின்றது.
ராஜேந்திர சோழனின் முடிசூட்டு விழாவிற்கு மக்கள் சிறப்பு பூஜை செய்ததற்காக நிவந்தம் கொடுத்திருக்கிறார்கள் என்ற கல்வெட்டு இங்கே குறிக்கப்பட்டிருக்கிறது. அந்த கல்வெட்டு தகவலை டாக்டர் ராசமாணிக்கனார் வரலாற்று மையத்தின் மூலம். டாக்டர் கலைக்கோவன், முனைவர் அகிலா மற்றும் முனைவர் நந்தினி ஆகியோர் வாசித்து அதை ஒரு பெயர் பலகையாகவே அந்த கோவிலில் வைத்திருக்கிறார்கள்.
இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு கோவிலாகும். இந்த கோவிலில் சுற்று கல்வெட்டுகள் இருக்கின்றன. ராஜேந்திர சோழனின் மெய்கீர்த்தியுடன் துவங்கும் கல்வெட்டு இங்கே கிடைக்கிறது. நிவந்தங்ளைப் பற்றிய குறிப்புகள் இருக்கிறது. பல்லவர்கள் கட்டிய கோவில் சோழர்கள் நிவந்தமளித்திருக்கிறார்கள். மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், அகிலாண்டேசுவரி அம்மன் சன்னதி பாண்டியர்கள் கால திருப்பணியாகும்.
நமது அரசர்கள் ஆன்மீகத் தலங்களை ஒவ்வொரு அரசு மாறும் பொழுதும் சரியாக கவனித்து வந்திருக்கிறார்கள். மன்னர்களுக்கிடையே பேரரசுகளுக்கிடையே போட்டியும் போரும் இருந்த பொழுதும் ஆன்மீகத் தலங்களை, குறிப்பாக சிவாலயங்களைப் பேணி காப்பதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு தங்கள் திருப்பணியை செய்து இருக்கிறார்கள்.
பெரும்பாலான சோழர்கள் கால சிவன் கோவில்களில் அம்மன் சன்னதி பாண்டியர்கள் காலத்தியதாக இருக்கும். சோழர்கள் சிவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பது போல் பாண்டியர்கள் அம்மனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பதால் இப்படி நிகழ்ந்திருக்கிறது. அதற்கு ஒரு சான்றாக சிங்களாந்தபுரம் அமர சுந்தரேஸ்வரர் கோயிலில் அகிலாண்டேஸ்வரி சன்னதியும் இருக்கிறது. இந்த கோவிலில் தற்பொழுது கும்பாபிஷேகத்துக்காக திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் திருக்குடமுழுக்கு நடைபெறும்.
அந்த தகவல் கிடைக்கும் பொழுது, நிச்சயமாக மீண்டும் திருச்சி விசனில் தகவல் பதிவிடுகிறோம். வாய்ப்பு இருப்பவர்கள் திருக்குடமுழுக்குவிற்கும் சென்று வர நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆன்மீகத் தலத்தை கண்டு மகிழ்வோம்.
தமிழூர் கபிலன்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision