திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் 49கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட பயோ மைனிங் திட்டம் மின் இணைப்பு இல்லாததால் முடக்கம்!

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் 49கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட பயோ மைனிங் திட்டம் மின் இணைப்பு இல்லாததால் முடக்கம்!

திருச்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் திருச்சி அரியமங்கலத்தில் 45 ஏக்கர் பரப்பில் உள்ள குப்பை கிடங்கில்  சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கினால் காற்று மாசு, நீர் மாசு, சுகாதாரப் பிரச்சனைகள், தீ விபத்து என அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை கையாண்டு வந்தனர். இந்நிலையில் அந்த குப்பை கிடங்கை முழுவதும் அகற்றுவதற்காக கடந்த ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 49 கோடி ரூபாய் பயோ மைனிங்  திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் பயோ மைனிங் திட்டத்திற்கான இயந்திரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சிக்மா என்ற ஒப்பந்த நிறுவனம் இப்பணியினை தொடங்கியுள்ளது.தற்போது அந்த இயந்திரத்தை பொருத்தும் பணி முழுவதுமாக நிறைவுற்று, கடந்த 25 நாட்களுக்கு மேலாக பயோ மைனிங் திட்டத்தின் மூலம் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.   பயோ மைனிங் திட்டம் என்பது திடக்கழிவுகளை பிரித்தெடுக்கும்  முறையாகும்.

குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு, பயோ கல்சர் தெளிக்கப்பட்டு, கன்வேயர்ரில் போடப்பட்டு பெரிய கல், மரம், கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் தனியாக பிரித்து தூள் தூளாக அரைக்கப்படுகிறது.பின்னர் ஒரு பகுதி சிமெண்ட் ஆலைகளில் எரிபொருளாகவும், 6 மில்லி மீட்டருக்கும் குறைவான தடிமன் உள்ள மண் உள்ளிட்ட கரிமப் பொருட்கள் நுண் உரமாகவும், ஆறு மில்லி மீட்டருக்கும் தடிமன் கூடுதலாக உள்ள பொருட்கள்  தாழ்வான பகுதியில் உள்ள பள்ளங்களை நிரப்ப(land filling) பயன்படுத்தப்பட உள்ளது.

Advertisement

குப்பை கிடங்கில் 7 லட்சம் கியூபிக் மீட்டர் குப்பையில்,
இதுவரை 6 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை பிரித்தெடுக்கப்பட்டு உள்ளது.ஒரு மெட்ரிக் டன் குப்பை சுத்தம் செய்வதற்கு 670 ரூபாய் என கூலி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் இந்த பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது பின்னர் இந்த 45 ஏக்கர் பரப்பளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்காக்கள், நூலகங்கள் அமைக்கப்பட உள்ளது. இனி மொத்த குப்பை உற்பத்தியாளர்களான ஹோட்டல், மருத்துவமனைகள், பெரிய நிறுவனங்கள் போன்ற 5000 சதுர மீட்டருக்கு அதிகமாக உள்ள கட்டிடங்களுக்கு குப்பையை மாநகராட்சி வாங்காது. அதாவது அவர்கள் தங்களுடைய மக்கும் குப்பைகளை பிரித்து உரம் தயாரித்து, மக்காத குப்பையை மட்டும் மாநகராட்சிக்கு வழங்க வேண்டும்.

ஒரு நாளைக்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பையை சுத்தம் செய்ய வேண்டும், தற்போது  சோதனை ஓட்டம் நடைபெறுவதால் 6 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பையை சுத்தம் செய்து வருகிறது. இயந்திரம் கூடுதல் திறனுடன் இயங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த இயந்திரம் இயங்குவதற்கான புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியில் இருந்து மின் இணைப்பு இதுவரை வழங்கப்படாததால் இந்த பணிகள் முடக்கம் அடைந்துள்ளது.மின்மாற்றி பொருத்தப்பட்டு  இருக்கிறதே தவிர பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லை.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் கேட்ட பொழுது, ஒப்பந்ததாரர்களுக்கு தேவையான மின்சாரம் மாநகராட்சி இணைப்பில் இருந்து  வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பந்ததாரர்கள் குறை சொல்ல வேண்டும் என்று குறை சொல்கிறார்கள் என்றார்.

மேலும் மின்மாற்றி பொருத்த  மின்சார வாரியத்திற்கு உரிய தொகை செலுத்திவிட்டதாகவும், மின்வாரியம்தான் இனி மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்றும், இதில் மாநகராட்சியின் பங்கு எதுவும் இல்லை என்றும் மின்சாரவாரியத்திடம் தொடர்பு கொண்டு வருகிறோம் என்றும் தெரிவித்தார்.மேலும் மின்சார வாரியத்திலும் மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஒப்பந்ததாரர்கள் முன்னே இவ்வளவு மின்சார அளவு வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டும்.

Advertisement

மின் ஆய்வாளர் வந்து ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும். அவர் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டு அந்த ஆய்வின் அடிப்படையில் மின்னிணைப்பு வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் மின்சார வாரியம், ஒப்பந்ததாரர் மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.

இன்னும் மூன்று மாத காலத்திற்குள் காத்தடி காலம் வந்துவிடும் எனவே குப்பைகள் பறக்கும் அபாயம் இருப்பதால், தேவையான அளவு மின் இணைப்பைக் கொடுத்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.49 கோடி ரூபாய் செலவில் 45 ஏக்கர்  குப்பை கிடங்கை அகற்றுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள பயோ மைனிங் திட்டம் முறையான மின் இணைப்பு இல்லாமல் முடங்கி விடக்கூடாது என்பதே பொது மக்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது