திருச்சிக்கு பெருமை சேர்க்கும் உலகின் நான்காவது பழமையான கல்லணைக் கால்வாய்-க்கு வயது 86!

திருச்சிக்கு பெருமை சேர்க்கும் உலகின் நான்காவது பழமையான கல்லணைக் கால்வாய்-க்கு வயது 86!

சோழர் காலம் அது! உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்ட காலம். காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடம் கொள்ளிடம் என்பார்கள். அதற்கு முன்பாக தலைக் காவிரியில் உருவாகும் காவிரி எந்த ஒரு தங்கு தடையுமின்றி மழைக்காலங்களில் அடிக்கடி வெள்ளப் பெருக்கெடுத்து ஓடி சோழ நாட்டுக்குள் புகுந்து பேரழிவை ஏற்படுத்தியது. 

Advertisement

கல்கி எழுதிய வரலாற்று நாவல் பொன்னியின் செல்வனை படிக்கும்போது காவிரியின் பெருமைகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தமிழகம் பலமுறை அழிவை சந்தித்துள்ளது குறிப்பாக திருச்சி உறையூர் பகுதி கடுமையான பேரழிவை சந்தித்தது. 

கடலில் வீணாக கலக்கும் இந்த காவிரி நீரை கோடைகாலத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும் குடிநீருக்கு கிடைக்கும் வகையிலும் அன்றைய சோழ பேரரசின் வேந்தனாக திகழ்ந்த கரிகாலச்சோழன் கட்டிய அணைதான் கல்லணை! 

ஆயிரத்து 80 அடி நீளமும் 60 அடி அகலமும் 18 அடி உயரமும் பெரும் கற்கள் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி ஓடுகின்ற ஆற்றின் குறுக்கே கட்டிய கல்லணை இன்று வரை வியத்தகு கட்டிட கலையாகவே பார்க்கப்பட்டு வருகிறது.இப்போதைய தொழில்நுட்பங்களை விட அப்போதே சிமெண்டும் கலவையும் இல்லாமல் சுமார் கிபி முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அணை இன்றளவும் கட்டுக்கோப்புடன் நீடித்து வருகிறது என்றால் அது உலகம் வியக்கும் ஒன்று விஷயம். 

Advertisement

காவிரி சமவெளி பெரு நிலப்பரப்புதான் தமிழகத்தின் முதுகெலும்பு  கல்லணைக் கால்வாய் வெட்டப்பட்ட பின்னர்தான் காவிரியின் முழு பலனையும் சமவெளி மக்கள் கடைமடை வரை பயன்படுத்தினார்கள். நாமும் செழித்தோம். செழித்தது மட்டுமல்ல தஞ்சாவூர் இருக்கிறது என்ற தைரியத்தில் வளர்ந்தோம் தலை நிமிர்ந்தோம். கல்லணை கால்வாய் 28.08.1934-ல் திறக்கப்பட்டது. இந்த ஆண்டோடு 86 வயதை நிறைவு செய்கிறது. இந்த ஆற்றை அன்றைய பிரிட்டிஷ் அரசின் ராணுவப் பொறியாளர் கர்னல் டபிள்யூ.எம்.எல்லிஸ் இங்கிலாந்தின் தேம்ஸ் நதியை முன் உதாரணமாக கொண்டு தான் நகரின் மத்தியில் ஆறு செல்வது போல் வடிவமைத்தார். 

உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த அணைகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள நான்காவது அணையாக கல்லணை திகழ்கிறது. இயந்திரங்களின் உதவியின்றி மனிதன் கட்டிய பழமையான அணையாக விளங்குவதுடன் சோழர்காலக் கட்டிடக்கலைக்கு சான்றாகவும் திகழ்கிறது. இதனை நீர்த்தேக்கம் என்று சொல்வதைவிட நீர்களை பிரித்து விடும் மதகு அணை என்று தான் சொல்ல வேண்டும். அதன் மீதுதான் 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் தற்போதை கல்லணை கட்டுமானத்தை எழுப்பியுள்ளனர். கரிகாலன் காவிரிக்கு கல்லணை கட்டிய செய்தியினை பழங்கால இலக்கியங்களான கலிங்கத்துப்பரணி குலோத்துங்கசோழன் உலா பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்கள் இன்றளவும் பறைசாற்றி வருகின்றன. 

திருச்சிக்கு பெருமை சேர்க்கும் காவிரி ஆறு ஸ்ரீரங்கத்தை தீவாக பிரித்து அழகு சேர்க்கிறது. மாலை வேளைகளில் காவிரி பாலத்தில் காற்று வாங்கும் சிறுசுகளும் பெரிசுகளும் இன்றளவும் இருந்து தான் வருகின்றனர். அப்போதைய சோழர்காலத்தில் ஆடி 18 அன்று தமிழகமே வியக்கும் அளவிற்கு திருவிழாவாக கொண்டாடப்பட்ட காவிரியின் பாரம்பரியத்தை தான் இன்று கொரோனாவுடன் கொண்டாடினோம். திருச்சி என்று சொன்னாலே முதலாவதாக நினைவு வருவது காவிரி ஆறுதான். திருச்சியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் கல்லணை அமைந்துள்ளது. இங்கு தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் அணையின் அழகை ரசித்து செல்கின்றனர். கல்லணையை கட்டிய கரிகால சோழனை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. மொத்தத்தில் திருச்சியின் அழகை மேலும் மெருகூட்ட சோழர்களால் வடிவமைக்கப்பட்ட வியத்தகு கட்டிடக்கலை தான் இந்த கல்லணை. 

கல்லணைக்கு திருச்சியிலிருந்து செல்லும்போதே வழியெங்கும் பசுமை பூத்து அழகான பாதையில் வயல்வெளிகளை ரசித்தபடியே பயணம் துவங்குகிறது. சாலையின் இடையே கல்லணையின் கிளை வாய்க்கால்கள் ஆங்காங்கே ஓடி செல்லும் வழி எங்கும் உள்ள ஊர்களை பசுமை பூக்க செய்கிறது. திருச்சியிலிருந்து கல்லணைக்கு காவிரிக்கரையின் இரண்டு பகுதிகளுமே சாலை செல்கிறது. 

கல்லணையின் நுழைவுவாயிலில் ஆவி பறக்க வேகவைத்த வேர்க்கடலையும் சோளக்கருதும் சுண்டி இழுக்கின்றன. கல்லணையில் பிடிக்கப்பட்ட மீன்கள் அப்போதே எண்ணெய் சட்டியில் வறுத்தன் வாடை, நமது கால்களை கடையை நோக்கி நடக்க செய்கின்றன. கல்லணையில் இளங்காற்றுக்கு ஏற்ப காரசாரமான கார வகைகளும் பலகாரங்களும் பஜ்ஜி கடைகளில் பரிட்சை செய்து அதனை அணையின் மீது கால்களை நடக்கச் செய்து கல்லணையில் தண்ணீர் செல்லும் அழகையும் நமக்கு சுவையும் தருகின்றனர் அங்குள்ள வியாபாரிகள். 

டெல்டா மாவட்டங்களுக்கு கல்லணையில் நீர்திறப்பு என்றால் அன்று விழாக்கோலம் தான். கிடா வெட்டி பூஜை செய்து கல்லணையின் மதகுகளை திறக்கும் அந்த நாளுக்காக விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் காத்திருந்து வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் அங்கு உள்ள பூங்காக்களில் சிறுவர்களை கவருவதற்காக வானுயர்ந்த ராட்டினங்கள், சர்க்கஸ் கள் என சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஓய்வு எடுத்து செல்லும் இடமாக கல்லணை திகழ்ந்து வருகிறது. இந்த கல்லணை சுற்றுலா தளத்திற்கு திருச்சியில் இருந்து 30 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் அதிகமாக வரும் காலங்களில் அதன் காற்று அணையில் செல்லும் நம்மையும் ஒரு நிமிடம் மெய்சிலிர்க்க வைக்கிறது. குறைவாக தண்ணீர் வரும் காலங்களில் குடும்பங்களோடு வந்து அணையின் கீழ் பகுதியில் ஆட்டம் போடும் மக்களும், விடுமுறை நாள் என்றாலே எப்போதும் பிஸியாக காணப்பட்டு வருகிறது இந்த கல்லணை.திருச்சியில் இருந்து தஞ்சாவூர் செல்பவர்கள் பெரும்பாலும் இந்த கல்லணை வழியையே திரும்பி செல்கின்றனர்! 

முழுகுல நதிக்கு
அரசர் முடிகொடு வகுத்த கரை 
முகில்தொட அமைத்தது அறிவோம்
- குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ்