மூவர்ணங்களில் ஜொலிக்கும் திருச்சி மேலப்புதூர் மேம்பாலம்
திருச்சி நகரை அழகாக்கும் பல திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூன்று வர்ணங்களில் வண்ணமயமாக மாற்றப்பட்டு கண்கவர் இடமாக மாறியுள்ளது திருச்சி மேலப்புதூர் மேம்பாலம். திருச்சி மாநகருக்குள் உள்ள எல்லா பிரதான பாலங்களிலும் இது மட்டுமே சுரங்கப்பாலமாக உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம் மற்றும் திருச்சி ரயில்வே நிலையத்தினை இணைக்கும் பாலமாக உள்ளது.இது 1976 ல் கட்டப்பட்டது.
1978ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 46 வருடங்கள் கடந்தாலும் இன்றும் பாலத்தின் சுவர்கள் பாதிக்கப்படாமல் உள்ளது அக்கால கட்டிட தொழில்நுட்பத்தின் சிறப்பம்சாகும். சில வருடங்களாக சுவரில் பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டு இருந்த நிலையில், தற்போது இந்த பாலம் இந்திய நாட்டின் தேசியக் கொடியை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் வகையில் மாநகராட்சியால் திட்டமிடப்பட்டு மூன்று வர்ணங்களில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
இதுகுறித்து ஓவியர் ஜெயக்குமார் கூறுகையில்.... திருச்சியில் மிகவும் பழமையான பாலம் திருச்சி மேலப்புதூர் மேம்பாலம் ஆகும். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மேம்பாலத்தை தினசரி பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் இந்த பாலத்தை கடந்து செல்லும் பொழுது சில நிமிடங்கள் இதை பார்த்துவிட்டு செல்லும் அளவிற்கு அழகாக இருக்க வேண்டும் அதே சமயம் நம் நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தினை பிரதிபலிக்கும் வகையில் அமைக்க வேண்டும் என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் மருத்துவர் ஹக்கீம் அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த ஓவியமானது தேர்வு செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கிய இந்த பணிகள் 30 நபர்களோடு 15 நாட்களில் இரவு பகலாக வேலை செய்து முடிக்கப்பட்டது. திருச்சி காவேரி மருத்துவமனை இதற்கான நிதி உதவி வழங்கினர். ஒவ்வொரு வரலாற்று நினைவிடங்கள் மிகவும் அழகாகவும் தூய்மையாகவும் வைத்திருப்பது நம்முடைய கடமையாகும் என்றார்.
தமிழகத்தின் சுற்றுலா நகரங்களில் திருச்சி மிக முக்கிய நகரமாகும். பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் திருச்சி நகருக்கு வருகின்றனர். அவர்கள் கடந்து செல்லும் பாதைகள் எல்லாம் அவர்களை கவரும் வண்ணம் மாற்றப்பட்டு வருகிறது. ஆனால் இவை அனைத்தையும் பாதுகாக்க வேண்டியது பொதுமக்களுடைய கடமையாகும். நம் நகரை அழகாய் பராமரிப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை என்று ஒவ்வொருவரும் உணர்ந்தால் மிகவும் அழகாகவும் தூய்மையாகவும் பராமரிக்கலாம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO